அமலுக்கு வந்தது 'ஆதார்' சட்டம்
புதுடில்லி:'ஆதார்' சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.சமையல், 'காஸ்' மானியம், ஆதார் எண்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
இதேபோல, அரசின் பிற திட்டங்கள், மானியங்கள், தகுதியானவர்களை சென்றடைவதை உறுதி செய்யும்வகையிலான, ஆதார் மசோதா, மார்ச் 16ம் தேதி, பார்லிமென்ட்டில், நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து, இந்த சட்டத்தை
அமல்படுத்தும் வகையில், மார்ச் 26ம் தேதி, மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளது. ஆதார் எண்கள் ஒதுக்கப்படாதவர்களுக்கு, மாற்று அடையாள நடைமுறை வழங்கப்படும் எனவும், இந்த ஆதார் எண்கள், குடியுரிமைக்கான சான்றல்ல எனவும், மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த சட்ட விதிகளை மீறுவோருக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும்; 10 ஆயிரம் ரூபாய்முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.