மதிய உணவு திட்டம் கண்காணிக்க மாவட்டத்தில் இருவர் குழு.
மதிய உணவு திட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு,மாவட்ட அளவில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் பட்டியல் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காணிப்பு பணியில் ஈடுபட, மாவட்டத்தில் ஒரு தலைமையாசிரியர்,
ஒரு ஆசிரியர் அடங்கிய, இருவர் குழுவை தேர்வு செய்து விபரங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சத்துணவு திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், 46 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இம்மாணவர்களுக்கு, தினந்தோறும் கலவை உணவு, உணவுடன் முட்டை, நான்கு செட் சீருடை வழங்கப்படுகின்றன. பிற நலத்திட்டங்களை காட்டிலும், சத்துணவு திட்ட செயல்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாணவர்கள் எண்ணிக்கை முறையாக கொடுக்காமல் அதிகரித்து கொடுத்து, நிதி முறைகேடு நடப்பதாகவும், ஒரு சில இடங்களில் தவறுதலாக மாணவர்கள் எண்ணிக்கை கொடுப்பதால் உணவு வீணடிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மாவட்ட அளவில் ஊராட்சி, ஒன்றிய, அரசு, அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மொத்த மாணவர்கள் எண்ணிக்கை, சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க, ஒரு தலைமையாசிரியர், ஒரு இடைநிலை பட்டதாரி ஆசிரியரை தேர்வு செய்து அப்பட்டியலை அனுப்பும் படி மாவட்டதொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.