ரயில் டிக்கெட் முன்பதிவை தொலைபேசி மூலம் ரத்து செய்யலாம்:புதிய வசதி அடுத்த மாதம் அறிமுகம்

ரயில் டிக்கெட் முன்பதிவை தொலைபேசி அழைப்பு மூலம் ரத்து செய்யும் புதிய வசதி அடுத்த மாதம் (ஏப்ரல்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


             ரயில் பயணத்துக்காக இணையதளம் மூலம் விண்ணப்பிப்போர், அந்த இணையதளத்தின் மூலமே டிக்கெட்டை ரத்து செய்து விடலாம். ரயில் நிலையத்துக்குச் சென்று டிக்கெட்டை முன்பதிவு செய்வோர், அதை ரயில் நிலையத்தில் சென்றே ரத்து செய்ய முடியும். குறிப்பாக, ரயில் நிலையம் சென்று டிக்கெட்டை ரத்து செய்வோர், அங்கு இருக்கும் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கு பயணிகளுக்கு கால விரயம் ஆவதுடன், குறித்த நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்பப் பெற முடியாத நிலை நிலவுகிறது.
இவற்றைப் பரிசீலித்த ரயில்வே துறை, முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட்டை தொலைபேசி அழைப்பு மூலம் ரத்து செய்யும் புதிய வசதியை வரும் ஏப்ரல் மாதம் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் பயணி, அதை ரத்து செய்ய விரும்பும்பட்சத்தில் 139 என்ற தொலைபேசி எண்ணை தனது செல்லிடப்பேசியில் இருந்து அழைக்க வேண்டும். அப்போது, அந்த எண்ணில் பேசுவோரிடம் முன்பதிவு செய்த டிக்கெட்டின் விவரங்களை பயணி தெரிவித்து, அதை ரத்து செய்யும்படி கோர வேண்டும். இதைத் தொடர்ந்து, அந்த செல்லிடப்பேசி எண்ணுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (ஒன்டைம் பாஸ்வேர்ட்) அனுப்பி வைக்கப்படும்.
அந்த கடவுச்சொல் வந்த அதே தினத்தில், ரயில் நிலையத்துக்குச் சென்று அந்த கடவுச்சொல்லை காட்டி, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு கட்டிய பணத்தை பயணி திரும்பப் பெறலாம் என்று அந்த ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த 139 என்ற தொலைபேசி எண்ணானது, ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்குப் பொருந்தாது.
வரும் ஏப்ரல் மாதம் 2ஆவது வாரம் முதல், இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank