மக்களை ஏமாற்றியதாக ரிங்கிங் பெல்ஸ் மீது புதிய வழக்கு.!!
உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போன் கருவியை வழங்குவதாக தெரிவித்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மீது நொய்டா காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கின்றது.
பாஜக கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் கே சோமையா அளித்த புகாரின் பேரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மோஹித் கோயல், தலைவர் அஷோக் சத்தா மீது ஐபிசி செக்ஷன் 420 மற்றும் சில பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கின்றது.
ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போன்களை விளம்பரம் செய்து ஏமாற்றுதல், மோசடி, சிறு முதலீட்டாளர்கள், இந்திய பொது மக்களை தவறாக வழிநடுத்தவது, உள்ளிட்ட காரணங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை வைத்து தினசரி நாளிதழ்களில் விளம்பரம் செய்து முதலீடு பெற்றது, விளம்பரங்களில் இந்திய கொடியை பயன்படுத்தியது போன்றவைகளும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் ஃப்ரீடம் 251 கருவிக்கு மொத்தம் 7.35 கோடி முன்பதிவுகளை பெற்றிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது. இத்தனை குறைவான விலைக்கு கருவியை எப்படி வழங்க முடியும் என்ற கேள்வி சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து அந்நிறுவனம் முன்பதிவுகளில் பெற்ற பணத்தை திரும்ப வழங்கியது.
மேலும் ரிங்கிங் பெல்ஸ் கருவி என அந்நிறுவனம் வழங்கிய கருவிகள் ஆட்காம் நிறுவனத்துடையது என புதிய சர்ச்சை கிளம்பியது. இதை தொடர்ந்து அந்நிறுவனம் முன்பு வழங்கியது ப்ரோடோ டைப் கருவி என்றும் விரைவில் கருவி வெளியாகும் என தெரிவித்தது. இதோடு துவக்கத்தில் கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என தெரிவித்து அதன் பின் முதல் கட்ட ஸ்மார்ட்போன்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என தெரிவித்தது.
ரிங்கிங் பெல்ஸ் சார்ந்த குழப்பங்களை தொடர்ந்ததையடுத்து அந்நிறுவனம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.