மதுரை காமராஜர் பல்கலை.யில் ஆன்லைன் தேர்வு முறை ரத்து.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2014 -ல் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக 2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பேரவைக் கூட்டம் (academic council) பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக கன்வீனர் குழு உறுப்பினர் பேராசிரியர் வி.வெங்கட்ராமன், பதிவாளர் பொறுப்பு பேராசிரியர் ஏ.முத்துமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் தேர்வெழுதும் முறை ரத்துசெய்ததற்கான அவசர தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி பேராசிரியர் எஸ்.நேரு தேர்வை ரத்து செய்வதன் அவசியம் என்ன அதை விளக்கவேண்டும் என்றார்.அதற்குப் பதிலளித்த கன்வீனர் குழு உறுப்பினர் வி.வெங்கட்ராமன், ஆன்லைன் முறையில் தேர்வெழுத மாணவர்கள்யாரும் முன்வரவில்லை. நிர்வாக நடைமுறைச் சிக்கலும் உள்ளது என்றார்.
இதையடுத்து பல்கலைக்கழக கணினித்துறை பேராசிரியர் ஜி.ஆறுமுகம் பேசியதாவது: கடந்த ஆண்டு ஆன்லைன் தேர்வு முறை அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டது. அப்போதைய துணைவேந்தர் விருப்பப்படி, அந்த முறை கொண்டுவர கல்விப் பேரவை, ஆட்சிப் பேரவை மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆதரவளித்தனர்.
பல்கலைக்கழக நலன் கருதாமல், அந்தந்த துணைவேந்தர்கள் நலனைக் கருத்தில் கொண்டே பல முடிவுகள் எடுக்கப்படுவது சரியல்ல. அவசர கதியில் ஒருமுறையை அறிமுகப்படுத்துவதும், அதை அடுத்த ஆண்டே ரத்து செய்வதும் மாணவர்கள் நலனுக்கு நல்லதல்ல. ஒரு கல்விக் கொள்கை எடுத்தால் அதை விவாதித்து, சாதக,பாதகங்களை ஆராய்ந்து செயல்படுத்துவது அவசியம் என்றார்.அவரது கருத்தையே பேராசிரியர் சின்னையா, நேரு ஆகியோரும்வலியுறுத்திப் பேசினர்.அதேபோல, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் கணினி அறிவியல், கணினி மென்பொருள் (பிஎஸ்.சியில் சிஎஸ் மற்றும் ஐடி, எம்.எஸ்.சியில் சிஎஸ் மற்றும் ஐடி) என தனித்தனியாக உள்ளவற்றை இனிமேல் கணினி அறிவியல் பாடம் எனஒரே பெயரில் கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டது.
பேராசிரியர்களாக இருந்துகொண்டே ஆய்வுப்பட்டம் பெறுவோர் (பி.எச்.டி.) குறிப்பிட்ட காலத்தில் ஆய்வை முடிக்காவிட்டால் உதவித் தொகையை திரும்பப்பெறும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவை பரிசீலிக்கவும், ஆய்வுஅடிப்படையில் கூடுதல் கால அவகாசம் அளித்துவரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அனுமதியை செயல்படுத்த, மானியக்குழுவுக்கு பரிந்துரைக்கவும் பேராசிரியர்கள் எஸ்.நேரு, சின்னையா உள்ளிட்டோர் கோரினர்.கூட்டத்தில் கணிதப் பாடத்தில் புதிய சான்றிதழ் பட்டம் மற்றும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்துவது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.