மதிப்பிழக்கிறதா சென்னை பல்கலை?
சென்னை பல்கலைக்கு இருந்து வந்த, நூற்றாண்டு கடந்த பாரம்பரிய கவுரவம், வன்முறை சம்பவங்களால், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
பல்கலையின் சான்றிதழுக்கு, வெளிநாடுகளில் உள்ள மதிப்பு குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கடந்த, 1857ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் பல்கலையை பின்பற்றி, சென்னை பல்கலை உருவாக்கப்பட்டது. தென் மாநிலங்களில் உள்ள அனைத்து பல்கலைகளுக்கும் தாயாக, சென்னை பல்கலை மதிக்கப்படுகிறது. 159 ஆண்டு கால பாரம்பரியத்தில், சென்னை பல்கலையின் சான்றிதழ்கள், சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்பட கூடியவை.
பேராசிரியர் படுகாயம்: அதனால் தான், ’மெட்ராஸ்’ என்ற நகரத்தின் பெயர், ’சென்னை’ என, மாற்றப்பட்ட பின்பும், பல்கலையின் பெயர் மட்டும், ’யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ்’ என்றே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த பல்கலையில் கடந்த சில நாட்களாக அரங்கேறும் வன்முறை சம்பவங்களால், பதற்ற பூமியாக மாறியுள்ளது. அதனால், சர்வதேச மாணவர்களிடம் பல்கலை குறித்த மரியாதை குறைந்து வருகிறது.
வன்முறையின் உச்சகட்டமாக, நேற்று முன்தினம், சட்ட படிப்பு பேராசிரியரை, அவரது அறைக்குள்ளே புகுந்து, இரு மாணவர்கள் தாக்கியதுடன், அலுவலக அறையையும் சூறையாடினர். படுகாயம் அடைந்த பேராசிரியர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, பா.ஜ., - எம்.பி., தருண் விஜய் வந்த போது, அவர் முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர், நிகழ்ச்சி அரங்கிற்குள் செல்லவே இயலாத நிலை ஏற்பட்டது.
சில வாரங்களுக்கு முன், சில மாணவர்கள் சென்னை பல்கலை வளாகத்தில் எந்த அனுமதியும் பெறாமல், டில்லி ஜே.என்.யூ., பல்கலை பிரச்னை குறித்து உண்ணாவிரதம் இருந்தனர். ஒரு மாணவர், கையில் கெரசின் கேனுடன், பல்கலையின் நூற்றாண்டு கட்டட உச்சிக்கு சென்று, தற்கொலை செய்வதாக போராட்டம் நடத்தினார். அன்று முழுவதும், பல்கலையில் வகுப்பு நடக்கவே இல்லை.
அரசியல் அறிவியல் பிரிவில் காரணமே இல்லாமல், துறை தலைவரை எதிர்த்து, சில மாணவர்கள் மட்டும் போராட்டம் நடத்தினர். ஊடகவியல் துறையில், ஜப்பான் மாணவர்களுடன் இணைந்து கலாசார நிகழ்ச்சி நடத்திய போது, மாணவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்திற்குள் புகுந்து, ஒரு மாணவரை முன்னாள் மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கினர்.
நிர்வாகம் திணறல்
இப்படி, பல்கலையில், ஒவ்வொரு மாதமும் வன்முறை சம்பவம் நடக்காத, போராட்டம் இல்லாத நாட்களே இல்லை என்ற அளவுக்கு, பதற்றம் நிலவுகிறது. இதையெல்லாம் சமாளிக்க, சரியான நிர்வாகம் இல்லாமல், பல்கலை அதிகாரிகள் திணறி வருகின்றனர். துணைவேந்தர் இல்லாததால், பல அதிகார மையங்களின் நெருக்கடியில் சிக்கி, பல்கலையை நடத்த முடியாமல், பேராசிரியர்களும், நிர்வாகிகளும் திணறி வருகின்றனர்.
விதி மீறல்களுக்கு செயலர் உடந்தை?
சென்னை பல்கலையை கட்டுப்படுத்த வேண்டிய, தமிழக உயர் கல்வித்துறையின் செயல்களே பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. தற்காலிக ஒருங்கிணைப்பு குழு தலைவரான உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா, பல்கலை விவகாரங்களில் பல விதங்களில் தலையிடுவதாகவும், விதிமீறல்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும், கவர்னரிடம் பேராசிரியர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கையால், மாணவர்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை என, அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.