திருமலையில் திருமணம் இலவசம்:தரிசனத்துக்கும் சிறப்பு ஏற்பாடு:
திருமலையில், திருமணத்திற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இலவசமாக திருமணம் செய்து கொள்ளலாம்' என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இது குறித்து, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் கூறியதாவது: திருமலையில் உள்ள புரோகிதர் சங்கத்தில், ஆண்டு முழுவதும், திருமணங்கள் நடந்து வருகின்றன. முகூர்த்த நாட்களில், 250க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கின்றன.
திருமணத்திற்கு, திருமலையில் பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில் உள்ள புரோகிதர் சங்கத்தில், புரோகிதர்களுக்கு, 500 ரூபாய்; மேள வாத்தியத்திற்கு, 300 ரூபாய்; வீடியோ எடுக்க மின் கட்டணம், 60 ரூபாய் என, மொத்தம், 860 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது; தற்போது கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இனி, இலவசமாக திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் முடிந்த அரை மணி நேரத்தில், திருமண பதிவு சான்றிதழ் கிடைக்கும். திருமலையில் திருமணம் முடித்த தம்பதியர், சுபதம் வழியாக தரிசனத்திற்கு அனுப்பப்படுவர். தற்போது, 300 ரூபாய் விரைவு தரிசன வழியில், பெற்றோருடன் சென்று இலவசமாக தரிசிக்கலாம். புதுமண தம்பதியினருக்கு, தேவஸ்தானம் சார்பில் மஞ்சள், குங்குமம், கங்கணங்கள், 10 சிறிய லட்டு பிரசாதமும், இலவசமாக வழங்கபடும். திருமணத்திற்கு, இணையதள முன்பதிவு வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.