ONLINE EPIC CARD APPLY:
வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை:புதிய திட்டம் இன்று முதல் அமல்
வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வீடு தேடி வரும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக தேர்தல் கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் கமிஷன், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தொலைந்து போன, வாக்காளர் புகைப்பட அட்டைக்கு பதிலாக, புதிய மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறவும், அண்மையில் எடுக்கப்பட்ட, வண்ண புகைப்படத்தை, வாக்காளர் அடையாள அட்டையில் புதுப்பித்துக் கொள்ளவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்று முதல், வாக்காளர் அடையாள அட்டையை, வீட்டிலேயே பெற்றுக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் படி, வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பும் வாக்காளர், எந்த மையத்திற்கும் செல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே, கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் மூலமாக, 001 என்ற படிவத்தை பூர்த்தி செய்து, உரிய தொகையை, ஆன்லைனில் செலுத்தினால், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
வாக்காளர் அடையாள அட்டைக்கு மட்டும், 25 ரூபாய் செலுத்தினால், தேர்தல் கமிஷன் தெரிவிக்கும், வசதியாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். தங்கள் இருப்பிடத்திற்கே, அடையாள அட்டை வரவேண்டும் என விரும்புவோர், கூடுதலாக தபால் செலவுக்கு, 40 ரூபாய், இதர செலவுக்கு, 2 ரூபாய் சேர்த்து, 67 ரூபாயை, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் செலுத்த வேண்டும்.
இதற்காக, தேர்தல் கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒப்பந்தத்தில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஸ்டேட் பாங்க் சார்பில், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கான, தலைமை பொது மேலாளர் ரமேஷ் பாபு கையெழுத்திட்டனர்.
பணம் செலுத்தும் வசதி:தேர்தல் கமிஷன் இணையதளத்தில், ஏ.டி.எம்., கார்டு, கிரடிட் கார்டு, விசா கார்டு மூலம், வாக்காளர் அடையாள அட்டைக்கு, பணம் செலுத்தலாம். வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்தவர்கள் மட்டுமே, அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க முடியும்.