ப்ளஸ் 1 பாடபுத்தகத்தில் மாற்றம் இல்லை
பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் இந்த ஆண்டும் தொடரும் என்று பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளிகள் வருகின்றன. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் தொடக்க கல்வித்துறையின் கீழ் வருகின்றன. மேற்கண்ட பள்ளிகளில் மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கான புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அச்சிட்டு வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.ஒவ்வாரு ஆண்டும் இதற்காக 52 தலைப்புகளில் 6 கோடி புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான புத்தகங்கள் விலைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், பாடத்திட்டங்களை வகுத்து அதற்கேற்ப பாடங்களை எழுதும் பொறுப்பு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில்கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக அரசு 1 முதல் 9ம்வகுப்பு வரை சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்தது. அது படிப்படியாக ஒவ்வொரு வகுப்புக்கு அறிமுகமானது.இதற்கு முன்னதாக ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடப்புத்தகங்கள் அச்சிட்டு வழங்குவார்கள்.
இதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் கடந்த 2005ம்ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு அச்சிட்டு வழங்கினர்.அதில் கணக்கு, அறிவியல் பாடங்களில் கடினமான பகுதிகள் அதிக அளவில் இடம் பெற்று இருந்ததால் மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகரித்தது. இதை கருத்தில் கொண்டு கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக அரசு கடினப் பகுதிகளை நீக்கியது. அதற்கு பிறகுஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, புதிய பாடத்திட்டத்தின்படி புதிய பாடப்புத்தகங்களை அச்சிட்டு வழங்கி இருக்க வேண்டும்.மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் என்சிஇஆர்டி(தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின்) வரைவு பாடத்திட்டத்தின்படி புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு பிளஸ் 1 பிளஸ் 2 பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அந்த புதியபாடப்புத்தகம் அச்சிட அரசு அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் தற்போது அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டு விட்டது. அடுத்தகல்வி ஆண்டு தொடங்க இன்னும் 40 நாட்கள் உள்ள நிலையில் புதிய பாடப்புத்தகம் அச்சிட்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், வரும் கல்வி ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பழைய பாடப்புத்தகங்களே தொடரும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை கருத்தில் கொண்டு, தனியார் பள்ளிகளில் இப்போதே பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை நடத்த தொடங்கிவிட்டனர்.