அடுத்த 48 மணி நேரத்தில் கடும் வெயில்; பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்
அடுத்த 48 மணி நேரத்தில் கடும் வெயில்; நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்: வானிலை மையம்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிக வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியல் (98.6 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை (105.8 டிகிரி பாரன்ஹீர் வரை) உயரக் கூடும். எனவே தமிழகத்தின் கடலோரா மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
மேலும், பகல் நேரங்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். சென்னை, அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் பகல் நேரங்களில் அனல்காற்றும், வெப்பமும் அதிகரித்துக் காணப்படும். தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 108 டிகிரி
அதிக வெப்பத்தின் காரணமாக இன்று தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் இன்று பதிவான வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்): வேலூர் - 108, திருத்தணி, திருப்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், தருமபுரி - 106, மதுரை, பாளையங்கோட்டை - 104, நாகப்பட்டினம், சென்னை - 102, தொண்டி, கோவை - 100.
ஆட்சியர் எச்சரிக்கை
வானிலை மைய எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். வெயிலிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் வகையில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும், இந்த நேரத்தில் அதிக அளவில் களைப்பை ஏற்படுத்தும் பணிகளை செய்ய வேண்டாம் என்றும், நிறைய தண்ணீர் பருக வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலெட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், காற்றோட்டமான பருத்தி அடைகளை அணிய வேண்டும். குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை பார்க்கிங் செய்துள்ள வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வெளியே செல்ல நேரும்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். தலை, கழுத்து மற்றும் கை கால்களை சிறிது ஈரமான துணியினால் மூடிச் செல்ல வேண்டும். தொப்பி அல்லது குடை எடுத்துச் செல்ல வேண்டும். களைப்பாக உணரும் பட்சத்தில் தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
தேநீர், காபி போன்றவற்றை தவிர்த்து மோர், கஞ்சி மற்றும் பழச்சாறு போன்ற பானங்களை அருந்த வேண்டும். வெயிலினால் சோர்வு மற்றும் உடல் நலக்குறை ஏற்படும் படச்தில் மருத்துவர்களை அனுகவும். கால்நடைகளை நிழலான இடத்தில் தங்க வைப்பதோடு அவைகளுக்கு தண்ணீரும் வழங்க வேண்டும் என்றார்.