ரூ.5க்கு 'குளுக்கோ மீட்டர்' உணர் கருவிகள்: அழகப்பா பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு.
சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும், 'குளுக்கோ மீட்டரில்' உள்ள உணர் கருவிகளை, ஐந்து ரூபாய்க்கு குறைவான செலவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை, அழகப்பா பல்கலை உயிர் மின்னணு மற்றும் உயிர் உணர்விகள் துறை கண்டுபிடித்துள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலை உயிர் மின்னணு மற்றும் உயிர் உணர்விகள் துறை தலைவர் சேகர் கூறியதாவது:சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு, நான்கு முறை ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும்.இந்த பரிசோதனை செலவுகளை குறைக்கும் வகையில், குறைந்த செலவில் மின்னணு கருவிகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சார்பில், 30 லட்ச ரூபாய் செலவில் மேற்கொண்டு வந்தோம்.அதன்படி, குளுக்கோ மீட்டர் உணர் கருவிகள், ஐந்து ரூபாய்க்கும் குறைவான விலையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, அதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் ஒப்படைத்துள்ளோம். சர்க்கரை நோயாளிகளுக்கு, ஊசி மூலம் ரத்தம் எடுக்கப்பட்டு சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது.
மூச்சு காற்று மூலமாக சர்க்கரை நோயின் அளவை கண்டறிவதற்கான அடுத்த கட்ட ஆராய்ச்சியில் எங்கள் துறை ஈடுபட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தற்போது ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்ய, குறைந்தபட்சம், 25 முதல் 30 ரூபாய் வரை செலவாகிறது.