6 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும் “இரும்பு மனுஷி”
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் இரோம் ஷர்மிளா.
இவர் கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருப்பதற்குக் காரணம் அந்த மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்.
எவரையும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்ய ராணுவத்தினருக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் இது. பொதுவாக, பிரிவினைவாத வன்முறைகள் தலைதூக்கும் மாநிலங்களில் இத்தகைய சட்டம் மத்திய அரசால் அமல்படுத்தப்படும்.
அதன்படி, மாநிலத்தை தனியாக பிரிக்கக் கோரி மணிப்பூரில் தலைதூக்கிய பயங்கரவாதத்துக்கு எதிராக முதல் முதலாக அந்த மாநிலத்தின் சில பகுதிகளில் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்தச் சட்டம் அந்த மாநிலத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், பலர் போலி மோதல்களில் கொல்லப்படுவதற்கு இச்சட்டம் காரணமாக இருந்தது என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், அந்தச் சட்டத்தை மணிப்பூரிலிருந்து மத்திய அரசு நீக்க வேண்டும் என்று கடந்த 2000 -ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி, தமது உண்ணாவிரப் போராட்டத்தைத் தொடங்கினார் இரோம் ஷர்மிளா.
உண்ணாவிரதத்தைத் தொடங்கிய மூன்றாவது நாள், அவர் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, தற்கொலைக்கு முயல்பவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதன்படி, இரோம் ஷர்மிளாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை அப்போது விதிக்கப்பட்டது. அத்துடன், நாசி வழியாக குழாய் மூலம் அவரது விருப்பமின்றி (தற்போது வரை) உணவும் செலுத்தப்பட்டது.
ஓராண்டு தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்த அவர், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் அவர், மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க, மீண்டும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
அவ்வாறு, இதுவரை 16 ஆண்டுகளாக அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் இருக்கிறார்.
அதனால்தான், “இரும்பு மனுஷி” என்று மணிப்பூர் மாநில மக்களால் அன்புடன் அவர் அழைக்கப்படுகிறார்.
தனது உண்ணாவிரதப் போராட்டம் குறித்து ஷர்மிளா கூறுகையில், “எனது குறி்க்கோளை எட்ட ஒரு கருவியாக உண்ணாவிரதப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். இதே ஆயுதத்தைதான் (உண்ணாவிரதம்) தேசப்பிதா மகாத்மா காந்தியும் பயன்படுத்தினார்” என்கிறார்.
தனது கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து 16 ஆண்டுகளாக போராடி வரும் இரோம் ஷர்மிளா “இரும்பு மனுஷி”தான்.