மருத்துவ படிப்புக்கு மே 9 முதல் விண்ணப்பம்: 'ஆன்லைன்' வசதி கிடையாது
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, மே, 9 முதல், விண்ணப்பம் வினியோகிக்கப்படும்,'' என, மருத்துவக்கல்வி இயக்குனர் விமலா தெரிவித்தார்.
இன்ஜி., படிப்புக்கான விண்ணப்பங்கள், ஏப்., 15 முதல், 'ஆன்லைன்' மூலம் வழங்கப்படுகிறது. 'இந்நிலையில், மே, 9 முதல், மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மே, 26 வரை
இதுகுறித்து மருத்துவக்கல்வி இயக்குனர் விமலா கூறியதாவது:எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, மே, 8ல் வெளியாகும். மே, 9 முதல், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், விண்ணப்பங்களை பெறலாம். www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளங்களில் இருந்தும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்; மே, 26 வரை விண்ணப்பம் கிடைக்கும்.
தரவரிசை பட்டியல்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே, 27 மாலை, 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும். தரவரிசை பட்டியல், ஜூன், 15ல் வெளியிடப்படும். 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர் க்கப்படுவர். ஜூலையில், முதற்கட்ட கலந்தாய்வும், ஆகஸ்டில், இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடத்தப்படும்; வகுப்புகள், ஆக., 1ல் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மொத்த இடங்கள் எத்தனை?
* இருபது அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 2,655 எம்.பி.பி.எஸ்., இடங்களில், 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக, 2,257 இடங்கள் மாநிலத்திற்கு கிடைக்கும். எட்டு சுய நிதி கல்லுாரி களில் உள்ள, 1,010 இடங்களில், மாநில அரசுக்கு, 595 இடங்களும், இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லுாரியில் இருந்து, 65 இடங்களும் கிடைக்கும்
* அரசு பல் மருத்துவ கல்லுாரியில் உள்ள, 100 பி.டி.எஸ்., இடங்களில், 85 இடங்களும்; 17 சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 1,610 இடங்களில், 970 இடங்களும் மாநிலத்திற்கு கிடைக்கும்
* ''நடைமுறைச் சிக்கல் கூடாது என்பதால், முற்றிலும், 'ஆன்லைன்' விண்ணப்ப முறை, இந்த ஆண்டு, ஒத்திவைக்கப்பட்டு உள்ளது,'' என, மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறினார்.