பிஎப் பணத்தை எடுப்பதை தடுக்க மத்திய அரசு புது திட்டம்
புதுடெல்லி: பிஎப் பணத்தை முன்னதாக எடுக்க முடியாது; 58 வயதில் தான் எடுக்க முடியும் என்று போட்ட உத்தரவை எதிர்த்து பெரும் வன்முறை வெடித்ததை அடுத்து வாபஸ் பெற்றது அரசு; ஆனால், இணக்கமாக பேசி, பிஎப் பணத்தை முன்னதாக
எடுக்க வேண்டாம் என்று கேட்டும் கொள்ளும் புதிய திட்டத்தை வரும் 1 ம் தேதி மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. பிஎப் திட்டத்தில் உள்ள பென்ஷன் திட்டத்தில் பல மாநில அரசுகள் சேரவில்லை. மேலும், பிஎப் பணத்தை 58 வயதில் தான் எடுக்க வேண்டும் என்ற கெடு பிடியை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. பிஎப் கமிஷனர் சமீபத்தில் இதை வெளியிட்டபோது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடகாவில் வன்முறை வெடித்தது.
இந்த நிலையில் இந்த கெடுபிடி உத்தரவை வாபஸ் பெற்று விட்டது பிஎப் ஆணையம். எனினும், அந்த விஷயத்தில் பிடிவாதமாகவே உள்ளது.
கடந்த 20ம் தேதி இந்த உத்தரவை வாபஸ் பெற்றவுடன் மறுநாள் பிஎப் தலைமை ஆணையர் ஜாய் உயர் அதிகாரிகளை அழைத்து பேசினார். பிஎப் திட்டத்தில் ஊழியர்கள் பணத்தை 58 வயதுக்கு முன் எடுக்க வேண்டாம் என்று இணக்கமாக பல அம்சங்களை சொல்லி வர வேண்டும். இதற்காக தனி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பேசினார்.
இதன்படி, ஏற்கனவே அமல் செய்வதாக இருந்த ஒரு ஊழியர் ஒரு பிஎப் கணக்கு என்று திட்டத்தை வரும் 1 ம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது ஆணையம். இந்த திட்டத்தின் நோக்கம், பிஎப் திட்டத்தில் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊழியரும், தொழிலாளரும் சேர வேண்டும். எதிர்காலத்தில் இந்த பிஎப் பென்ஷன் திட்டம் தான் இருக்கும். அதன் பலன்கள் ஏராளம் என்றெல்லாம் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
பிஎப் பென்ஷன் திட்டத்தில் ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் ஊழியர்களை சேர்க்க வேண்டும் என்று ஆணையம் கருதுகிறது. ஆனால், இந்த பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் பலனில்லை. பழைய பென்ஷன் திட்டமே சிறந்தது என்று பலரும் குரல் கொடுத்து விட்டனர்.
இருந்தாலும், மீண்டும் மாநிலங்களுக்கு இந்த விஷயத்தில் நிர்ப்பந்தம் ஏற்படுத்த பிஎப் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பல பிஎப் பணம் பிடிக்காத நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், தேயிலை எஸ்டேட்கள் என்று கணக்கு எடுத்து நடவடிக்ைக எடுக்க திட்டமிட்டுள்ளது.