ஆய்வக உதவியாளர் நியமனம் கேள்விக்குறியான உத்தரவு.
அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிநியமனம் கேள்விக்குறியாகி உள்ளதால் தேர்வு எழுதிய எட்டு லட்சம் பேர் தவிக்கின்றனர்.அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாகஉள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்தாண்டு மே 31ல் நடந்தது.
பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம், என அறிவிக்கப்பட்டிருந்ததால் 8 லட்சம் பேர்தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள் ஒருமாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆனால், கடந்த ஜூலை மாதம் வரை முடிவு வெளியிடப்படவில்லை. அதன்பிறகு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு பணியிடத்திற்கு 5 பேர் வீதம் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணியிடம் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது.நேர்காணலின் போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பிற்கு 10 மதிப்பெண்கள், உயர்கல்வி தகுதிக்கு 5 மதிப்பெண்கள், பணி அனுபவத்திற்கு 2 மதிப்பெண், கேள்வி,பதிலுக்கு 8 மதிப்பெண் என 25 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும்அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, நேர்முகத் தேர்வு நடத்த தடை விதித்தும், எழுத்து தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுக்கு உத்தரவிட்டார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 8 மாதங்கள் ஆகியும் பணிநியமனம் நடைபெறவில்லை.கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு உத்தரவிட்டால் உடனடியாக நியமனம் நடைபெறும்.
உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது. ஆனால், இந்த பணிநியமனத்தில்அரசியல் தலைவர்களின் தலையீடு இருப்பதால், கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு செய்முறை தேர்வு எழுதிய மாணவர்கள் ஆய்வக உதவியாளர்கள் பணியிடம் காலியாக இருந்ததால், சிரமப்பட்டனர். தேர்வு முடிவு வெளியாவது எப்போது, என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.