பள்ளிகளுக்கு குறைந்தபட்ச நில அளவு தமிழக அரசு எடுத்துள்ள இறுதி முடிவு என்ன? ஐகோர்ட்டு கேள்வி
தனியார் பள்ளிகளுக்கு நிபுணர்கள் குழு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச நிலஅளவு தொடர்பாக அரசு எடுத்துள்ள இறுதி முடிவினை தெரிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் சங்கச் செயலாளர் ஜோசப் சுந்தர்ராஜ். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நில அளவுபேராசிரியர் சிட்டிபாபு கமிஷன் பரிந்துரையின்படி, கடந்த 2004-ம் ஆண்டு தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் பள்ளிக்கு குறைந்தபட்சம் 6 கிரவுண்டு நிலமும், மாவட்ட தலைநகரங்களில் 8 கிரவுண்டு நிலமும், நகராட்சி பகுதிகளில் 10 கிரவுண்டு நிலமும், பேரூராட்சி பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலமும், கிராமங்களில் 3 ஏக்கர் நிலமும் தேவை என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.இந்த உத்தரவு வருவதற்கு முன்பாகவே தொடங்கப்பட்ட பள்ளிகளைப் பொறுத்தவரை, இந்த குறைந்தபட்ச நிலஅளவு சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டது.
தற்காலிக அங்கீகாரம்
இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண பள்ளி கல்வித்துறை இயக்குனர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை 2013-ம் ஆண்டு அமைத்து, தமிழக அரசு ஆராய்ந்தது. அந்த நிபுணர் குழு தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தி அதன் அறிக்கை தாக்கல் செய்தது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு குறைந்தபட்ச நிலம் இல்லை என்று கூறி, நிபுணர்குழு பரிந்துரையின் அடிப்படையில், அந்த பள்ளிகளை மூட தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டு முடிவுசெய்துள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையில், இந்த 746 மெட்ரிக் பள்ளிகளுக்கும் ‘ஒரே ஒருமுறை’ என்ற அடிப்படையில் தற்காலிக அங்கீகாரம் வரும் மே 2016 வரை வழங்கியுள்ளது.
எதிர்காலம் கேள்விகுறி
பள்ளிகளுக்கான குறைந்தபட்ச நிலம் தொடர்பாக இறுதி முடிவை அரசு இன்னும் எடுக்காத நிலையில், பள்ளி கல்வித்துறை 746 பள்ளிகளுக்கு அளித்துள்ள காலஅவகாசம் வரும் மே மாதத்தோடு முடிவடைகிறது.இந்த பள்ளிகளிலும் படிக்கும் சுமார் 5 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் அரசு நியமித்த நிபுணர் குழு என்ன பரிந்துரைகளை செய்துள்ளது? என்பதும் இதுவரை தெரியாமல் உள்ளது. எனவே இதுகுறித்து தகுந்த உத்தரவை இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பரிந்துரை என்ன?
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.சங்கரன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, ‘நிபுணர்கள் குழு செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் தனியார் பள்ளிகள் மீது எடுக்கப்பட்டுள்ள இறுதி முடிவு குறித்த விவரங்களை வரும் 18-ந் தேதிக்குள் இந்த ஐகோர்ட்டுக்கு அரசு தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.