பல லட்சம் தபால் ஓட்டுகள் வீணாகும் அபாயம்!

 தேர்தல் கமிஷனின் குளறுபடியான நடைமுறைகளால், நான்கு லட்சம் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. '2014 லோக்சபா தேர்தல் போல், இந்த முறையும் தபால் ஓட்டுகள் வீணாகி விடும்' என, ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.



தமிழக சட்டசபை தேர்தலில், ஓட்டுச்சாவடி பணிகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவர். மொத்தமுள்ள, 3.80 லட்சம் ஆசிரியர்களில், மூன்று லட்சம் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், போலீசாரும், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ளோருக்கு, தேர்தல் கமிஷன் மூலம் தபால் ஓட்டு விண்ணப்பம் வழங்கப்பட்டு, அவர்களின் ஓட்டுகள் சேகரிக்கப்படும். ஏப்., 24ல் ஓட்டுச்சாவடி அதிகாரிகள் மற்றும் அலுவல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு வந்த ஆசிரியர்களிடம், அவர்களின் தபால் ஓட்டு விவரம் எழுதி வாங்கப்பட்டது. ஆனால், ஆசிரியர்களுக்கு முன் அறிவிப்பு இல்லாததால், ஓட்டு குறித்த விவரங்களை அவர்கள் பயிற்சி வகுப்புக்கு கொண்டு வரவில்லை.

இதையடுத்து, மே, 7ல் நடக்கும், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது, தபால் ஓட்டு விவரங்களை சமர்ப்பிக்க, தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் முடிந்த, இறுதி பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே, தற்போது, தபால் ஓட்டுக்கு பழைய பட்டியலின் படி, விண்ணப்பம் அளித்தால், அவை மாறுபடும் போது, தபால் ஓட்டுகள் செல்லாததாகி விடும் ஆபத்து உள்ளது.

வீடுகளுக்கு அனுப்புவதால் பிரச்னை: தபால் ஓட்டு பிரச்னை குறித்து, தமிழக கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார், பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்க பொது செயலர் 
ராபர்ட் ஆகியோர் கூறியதாவது:பல ஆசிரியர்கள் வாக்காளர் பட்டியலில் திருத்தம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த திருத்தம் முடிந்து புதிய பட்டியல் வராததால், தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. அதேபோல், மே, 7ம் தேதி தான் அனைத்து ஆசிரியர்களிடமும், தபால் ஓட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.

அந்த விண்ணப்பங்களின் விவரங்கள், தேர்தல் கமிஷனின் இறுதி பட்டியலில் ஆய்வு செய்யப்படும். அதன் பின், அந்தந்த பகுதி தேர்தல் அலுவலர் அனுமதியுடன் தபால் ஓட்டுக்கான விண்ணப்பம், அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்படும். இந்த தொடர் செயல்முறை முடிய குறைந்தது, ஒரு வாரமாகும். எனவே, மே, 15ம் தேதி தான் தபால் ஓட்டு விண்ணப்பம், வீடுகளுக்கு வந்து சேரும். ஆனால், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மே, 14ம் தேதியே மாவட்ட தேர்தல் மையத்துக்கு பணிக்கு சென்று விடுவர்.

எனவே, விண்ணப்பங்களை நிரப்பிக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு, அந்த ஓட்டுகள் வீணாகும் அபாயம் உள்ளது. இதே நிலை தான், 2014லோக்சபா தேர்தலில் ஏற்பட்டு, 75 சதவீத தபால் ஓட்டுகள் உரியவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, இந்த முறையாவது தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, தபால் ஓட்டுகள் விரைவில் கிடைக்க, உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)