தமிழகம் முழுவதும் இன்று அனல் கொளுத்தும்; உஷாராக இருங்க
வெப்பத் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், 'தமிழகம் முழுவதும் இன்று அனல் கொளுத்தும்; உஷாராக இருங்கள்;
அவசியம் இன்றி வெளியில் தலை காட்ட வேண்டாம்' என, மாவட்ட நிர்வாகங்களே, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில், கோடைக்கு முன், மார்ச் மாதமே வெப்பத் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. 'வெப்பத் தாக்கம் மேலும் அதிகரிக்கும்; முந்தைய ஆண்டுகளை விட, 3 டிகிரி வரை கூடும்' என, உலக சுகாதார நிறுவனமும் எச்சரித்தது.
அதுபோலவே நாளுக்கு நாள் வெப்பத் தாக்கம் அதிகரித்து, மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இதனால் மக்கள், பகல் நேரத்தில் வெளியில் தலை காட்ட தயங்கி வருகின்றனர். இந்நிலையில், 'இன்று வழக்கத்தை விட, அனல் கக்கும்' என, தகவல்கள் பரவி வருகின்றன. இதை உறுதிப்
படுத்தும் வகையில், 'இன்று அனல் கொளுத்தும்; கவனமாக இருங்கள்' என, எப்போதும் இல்லாத
வகையில், மாவட்ட நிர்வாகங்களே, மக்களை உஷார்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகி
உள்ளது.
சென்னை கலெக்டர் கோவிந்தராஜ் அறிவிப்பு:தமிழக கடலோர மாவட்டங்கள், இதர பகுதிகளில், 48 மணி நேரத்தில், 37 டிகிரி செல்சியஸ் பதிவாக உள்ளது. அடுத்த, 48 மணி நேரத்தில், 41 டிகிரி செல்சியஸ் ஆக உயரும் என்பதால், வெப்பத் தாக்கம் அதிகம் ஏற்படலாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே, சென்னையிலும், வெப்ப அலை தாக்கம் ஏற்படலாம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். வெப்ப அலை தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள, பொதுமக்கள் அவசியம்
இன்றி வெளியில் செல்ல வேண்டாம்; குறிப்பாக, நண்பகல், 12:00 மணி முதல், பிற்பகல், 3:00 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுவாக, தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உட்பட, பல மாவட்ட கலெக்டர்களும் மக்களை உஷார்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகங்களே, இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு எச்சரித்துள்ளது, மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
என்ன செய்யலாம்:
* காற்றோட்டமான பருத்தி உடைகளை அணிய வேண்டும்
*குழந்தைகள், செல்லப் பிராணிகளை, 'பார்க்கிங்' செய்துள்ள வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம்
* தவிர்க்க இயலாத சூழலில், வெளியில் செல்ல நேர்ந்தால், குடிநீரை எடுத்துச் செல்வதுடன், தலை, கழுத்து, கை, கால்களை சிறிது, ஈரமான துணியால் மூடிச் செல்ல வேண்டும்
* தொப்பி, குடை எடுத்துச் செல்ல வேண்டும்
* களைப்பாக உணரும் பட்சத்தில், தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்
* டீ , காபி பானங்களை தவிர்த்து, மோர், கஞ்சி, பழ ஜூஸ் குடியுங்கள்
* வெயிலால் சோர்வு, உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அருகில் உள்ள டாக்டரை அணுக வேண்டும்
* கால்நடைகளை நிழலான இடங்களில் தங்க வைப்பதோடு, அவற்றுக்கு தேவையான அளவு தண்ணீர் தர வேண்டும்.இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை வானிலை ஆய்வு மையம், நேற்று முன்தினம் வெளியிட்ட வானிலை அறிக்கையில், 'அடுத்த, 48 மணி நேரத்துக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அனல் காற்று வீசும்' என, அறிவித்து இருந்தது குறிப்பிடத் தக்கது. இந்திய பொது சுகாதார சங்கத்தின், தமிழக தலைவர் இளங்கோ கூறுகையில், ''வழக்கத்தை விட, 3 டிகிரி கூடும் என, உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில், வெப்பத் தாக்கம் உள்ளது. எது, எப்படியோ, வெப்பத் தாக்கம் வாட்டி வதைத்து வருவதால், பொதுமக்கள் உஷாராக இருப்பதேநல்லது,'' என்றார்.
காரணம் என்ன?:தமிழகத்தில், இயல்பை விடவெப்பம் அதிகமாக இருக்கும் என்று தான் அதற்கு பொருள். வெப்ப அலை என, சொல்ல முடியாது. மேற்கில் இருந்து வரும் வெப்பக் காற்றும், மேக மூட்டம் குறைவாக இருப்பதும் வெப்பம் அதிகரிக்க காரணம். ஆனால், இந்த வெப்பம் மிக குறுகிய காலத்துக்கே இருக்கும்.
- பாலசந்திரன், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்.
கணிப்பு தவறா?:வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ஒய்.இ.எ.ராஜ் கூறியதாவது: ஒரு பகுதியில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என, கணிக்கும் போது, ஒரு நகரைக் கொண்டு கணிக்க முடியாது; அந்த மண்டலத்தில் நிலவும் வெப்பத்தின் அடிப்படையில் கணிக்க வேண்டும்.
'ஏப்ரல், 16, 17ல், அனல் காற்று வீசும்' என, கணிக்கும் போது, அந்த மாதத்தில் நிலவிய சராசரி வெப்பத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். அதிலிருந்து, 9 - 11 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரிக்கும் போதே, அனல் காற்று வீசும்.
சென்னையில் சராசரி வெப்பநிலை, ஏப்ரல் மாதத்தில், 100 டிகிரி பாரன்ஹீட் என்றால், 111 பாரன்ஹீட்டை எட்டும் போது, அனல் காற்று வீசம் என, கணிக்கலாம்.மதுரை, சேலம், ஈரோடு, வேலுார், திருச்சி நகரங்களில், ஒரு வாரமாக, 104 - 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவுகிறது.
இது, இயல்பை விட, 11 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு அதிகரிக்கவில்லை. மேலும், கடலோர மாவட்டங்களில், இதுவரை, 95 - 99 டிகிரி பாரன்ஹீட் வெப்பமே பதிவாகி உள்ளது. எனவே, தமிழகத்தில் அனல் காற்று வீச வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையில் ஒருவர் பலி:வெயிலின் கொடுமைக்கு, மதுரையில் ஒருவர் பலியானார். மதுரை, பாலரெங்காபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன், 57. மீனாட்சி கோவில் அருகே, கீழ ஆவணி மூலவீதி வழியாக சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். வெப்பத்தாக்கம் காரணமாக, சுருண்டு விழுந்து இறந்தது தெரிய வந்துள்ளது.
மதுரையில், இரண்டு நாட்களாக வெப்பத் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம், 104 டிகிரி; நேற்று, 102 டிகிரி பாரன்ஹீட், வெப்பம் பதிவாகி இருந்தது.