இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது தபால் ஓட்டு ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட படிவம் 7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வரும் 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் உள்ள 19 லட்சத்து 94 ஆயிரத்து 357 வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக 2,256 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் அன்று 11 ஆயிரத்து 851 அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களின் சொந்த தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு நியமிக்கப்படுவதால், அவர்கள் ஓட்டுப்போட வசதியாக தபால் ஓட்டு வழங்கப்படும்.இந்த தபால் ஓட்டுகள் கடந்த தேர்தலில் உரிய நேரத்தில் வழங்காததால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், இந்த தேர்தலில் முன்கூட்டியே தபால் ஓட்டுகள் வழங்கிட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.அதனையேற்ற தேர்தல் ஆணையம், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட வசதியாக முதல்கட்ட பயிற்சி வகுப்பிலேயே படிவம் 12-பி வழங்கிட உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு வரும் 24ம் தேதி, மே மாதம் 7 மற்றும் 12ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. அதில் முதல் பயிற்சி வகுப்பு நடைபெறும் 24ம் தேதி அனைவருக்கும் படிவம்-12-பி வழங்கப்பட உள்ளது. அதனை அவர்கள் உடனடியாகவோ அல்லது 7ம் தேதி பயிற்சி வகுப்பு முடிவதற்குள்ளோ பூர்த்தி செய்து வழங்கினால், 7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.
அதன் படிவங்களை பூர்த்தி செய்து, ஓட்டு சீட்டில் தனது ஓட்டை பதிவு செய்து பயிற்சி வகுப்பு மற்றும் தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் சேர்க்கலாம். அல்லது தொகுதி தேர்தல் அலுவலருக்கு தபாலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.