இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .
பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 11.4.2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்நிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கையின்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம், முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 31 சதவீதம் என இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் காணப்படுகிறது.
தமிழகத்தில், முற்பட்ட வகுப்பினருக்கு என சட்டப்படி இட ஒதுக்கீடு இல்லை. தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், முன்னேறிய இதர சமூகத்தினர் அனைவரும் மதிப்பெண் அடிப்படியில் 31 சதவீத இடத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த அடிப்படைக்கூடத் தெரியாமல் கல்வித்துறையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அருந்ததியர், முஸ்லிம்கள் ஆகியோருக்கு தனி இட ஒதுக்கீடு உண்டு. அதையும் இந்த சுற்றறிக்கையில் பிரித்து காட்டவில்லை.தமிழக அரசின் கல்வித் துறை, முரண்பாடான இந்த சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற்று சட்டப்படியானஇட ஒதுக்கீடு குறித்த சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.