வாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவர்கள் பெயர் சேர்ப்பு
பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கல்லுாரிகளில், 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஏழு கல்லுாரிகளில், இப்பணி 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டசபை தொகுதிகளில், வாக்காளர்கள் பட்டியலை பார்த்து பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும்; பெயர் சேர்த்தலுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தபட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டன.
மேலும், ஒரே பெயரில் இரண்டு பதிவுகள், போலி வாக்காளர்களை நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களாக இணைக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள போதிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக வீடு வீடாக சென்று ஆய்வு செய்து, அவர்களை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கல்லுாரியில் படிக்கும், 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட 16 கல்லுாரிகளில், இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆன்-லைன் மூலமாகவும்; விண்ணப்பம் 6 பெற்றும் பெயர் சேர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது. கல்லுாரி வளாகத்தில் நோட்டீஸ் போர்டில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக அறிவிப்பு ஒட்டப்படுகிறது. இதற்காக பயிற்சி கொடுக்கப்பட்ட மாணவர்களை கொண்டு, சக மாணவர்களை பட்டியலில் இணைக்கும் பணி வருவாய்த்துறை மேற்பார்வையில் நடைபெறுகிறது.
இதில், இக்கோட்டத்திற்குட்பட்ட 16 கல்லுாரிகளில், ஏழு கல்லுாரிகளில் இப்பணி முழு அளவில் முடிந்துள்ளது. பொள்ளாச்சி கோட்டத்தில், 1,155 பேர் புதிய வாக்காளர்களாக ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர். அதில், பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் மட்டும், 408 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற கல்லுாரிகளில், 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.
பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் காயத்ரி கூறுகையில், கல்லுாரிகளில், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. புதியதாக இணைக்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை விரைவில் வழங்கப்பட உள்ளது, என்றார்.