பிஎஃப் புதிய விதிகள் ரத்து: எதிர்ப்புக்குப் பணிந்தது மத்திய அரசு

தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) திரும்பப் பெறுவதற்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.


 முன்னதாக, பிஎஃப் புதிய விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசுப் பேருந்துகள் உள்பட 25 வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.
 புதிய கட்டுப்பாடுகள்: தொழிலாளி ஒருவர் தொடர்ந்து 2 மாதகாலம் தொடர்ந்து பணியில் இல்லையெனில் தனது பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. மேலும் பணியில் இருப்பவர்கள் 54 வயதை எட்டினால் பிஎஃப் பணத்தைப் பெற முடியும் என்ற விதியும் இருந்தது.
 இதனை மாற்றும் வகையில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி மத்திய அரசு ஓர் அறிவிக்கை வெளியிட்டது. அதில், ஒரு தொழிலாளி பணியில் இருந்து விடுபட்டு விட்டாலும், பிஎஃப் பணத்தை 58 வயதுக்கு முன்னர் திரும்ப எடுக்க முடியாது. தொடர்ந்து பணியில் இருப்பவர்கள் கூட 57 வயதுக்குப் பிறகுதான் பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும் என்று விதிகள் மாற்றப்பட்டன. இந்தப் புதிய விதிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
 தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு: மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. தொழிலாளர்கள் தங்கள் சொந்த உழைப்பில் ஈட்டும் பணத்தைத் திரும்பப் பெற அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்க முடியாது என்று தொழிற்சங்கத்தினர் கூறினர்.
 இந்த எதிர்ப்பை அடுத்து, புதிய விதிகள் அமலாக்கத்தை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும், புதிய விதிகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டுமென்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். 
 பெங்களூரில் வன்முறை: இந்நிலையில், பிஎஃப் புதிய விதிகளைக் கண்டித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசுப் பேருந்துகள் உள்பட 25-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டது. 
 பெங்களூரு பொம்மனஹள்ளியில் திங்கள்கிழமை 5 தனியார் ஆயத்த ஆடை நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தொடர்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மத்திய அரசைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தும்கூரு சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் சென்ற அரசுப் பேருந்துகளை நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, பேருந்துகளுக்குத் தீ வைத்தனர். இதில் 6 அரசுப் பேருந்துகளும் ஒரு மாநகரப் பேருந்தும் தீக்கிரையாயின.
 அதேபோல், ஒசூர் சாலையில் உள்ள ஹெப்பகோடியில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைத்திருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாயின. இந்த வன்முறையால் பெங்களூருக்கு பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
 துப்பாக்கிச்சூட்டில் மாணவி காயம்: ஹெப்பகோடியில் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது கல்லூரி மாணவி பிரீத்தி (18) என்பவரின் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 பணிந்தது மத்திய அரசு: பெங்களூர் வன்முறைச் சம்பவத்தை அடுத்து தில்லியில் செய்தியாளர்களிடம் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாவது:
 பிஎஃப் விதிமுறைகள் திருத்தம் தொடர்பாக மத்திய அரசு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. பிஎஃப் பணத்தை திரும்ப எடுப்பதில் ஏற்கெனவே இருந்த நடைமுறைகளே தொடரும். தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
 இந்த அறிவிப்புக்கு சில மணி நேரத்துக்கு (பெங்களூரு வன்முறைக்கு) முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பண்டாரு தத்தாத்ரேயா, "பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான புதிய விதிமுறைகள் அமல் மேலும் 3 மாதங்களுக்கு (ஜூலை 31 வரை) ஒத்திவைக்கப்படுகிறது' என்று கூறியிருந்தார்.
 எனினும், எதிர்ப்பு கடுமையானதை அடுத்து ஒரு சில மணி நேரங்களிலேயே மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டது.
கூடுதல் சலுகைகள் தரவும் முடிவு
புதிய விதிகளை திரும்பப் பெறுவதுடன் பிஎஃப் பணத்தில் புதிய சலுகைகளை தொழிலாளர்களுக்கு வழங்கவும் பரிசீலித்து வருவதாக தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
 அதன்படி, வீடு வாங்குவது, தீவிரமான உடல்நலக் குறைவு, திருமணம், குழந்தைகளின் கல்வி போன்ற காரணங்களுக்காக தொழிலாளர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை முழுமையாகத் திரும்ப எடுப்பதற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு சட்டத் துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)