மருத்துவப் படிப்பு: மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு.
மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது.
இது தொடர்பாக, உச்ச நிதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.தேவ், ஏ.கே,கோயல் அமர்வு முன்பு அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹாத்கி மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்துவது என்பது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவில் உரிய மாற்றம் தேவை எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய உத்தரவில் நிறைய குழப்பங்கள் உள்ளதாக குறிப்பிட்ட அட்டார்னி ஜெனரல், மே 1-ல் நடத்தப்பட வேண்டிய முதல் கட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு, ஜூலை 24-ல் ஒரே கட்டமாக நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த புதிய மனுவை இன்று பிற்பகலில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
பின்னணி விவரம்:
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 90-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது. இந்த நடைமுறைகளை மாற்றும் வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியவை முடிவு செய்தன. இதை எதிர்த்து வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இதனை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான அமர்வு கடந்த 2013 ஜூலை 18-ம் தேதி தேசிய நுழைவுத் தேர்வு நடத்த தடை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அனில் தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த 11-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் தேசிய அளவில் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கடந்த 2013-ல் பிறப்பித்த தடையுத்தரவையும் உச்ச நீதிமன்றம் வாபஸ் பெற்றது.
இதைத் தொடர்ந்து நடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த உத்தரவிடக் கோரி சங்கல்ப் அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் தேவ், கோயல், சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், கர்நாடக மருத்துவக் கல்லூரி கூட்டமைப்பு, வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவை தேசிய நுழைவுத்தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் ஆஜரானார். அவர் வாதாடியபோது, கடந்த 2007 முதல் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு நடத்தப்படவில்லை. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. அதே நடைமுறை தொடர அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், சிறுபான்மை கல்வி நிறுவனமான சிஎம்சி சார்பில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது, தேசிய நுழைவுத்தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று தெரிவித்தார். இதேபோல ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், கர்நாடக மருத்துவக் கல்லூரி கூட்டமைப்பின் வழக்கறிஞர்களும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று வாதிட்டனர்.
இந்த வாதங்களை நிராகரித்த 5 நீதிபதிகள் அமர்வு, 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (என்.இ.இ.டி.) நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
சிபிஎஸ்இ மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (ஏஐபிஎம்டி) இந்த ஆண்டு 6,67,637 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி மே 1-ம் தேதி தேசிய நுழைவுத் தேர்வு நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்டமாக தேசிய நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். இரண்டு கட்ட நுழைவுத் தேர்வு முடிவுகளையும் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிட்டு செப்டம்பர் 30-க்குள் மாணவர் சேர்க்கை நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேசிய நுழைவுத் தேர்வு குறித்த புதிய அட்டவணையை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நுழைவுத் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ கல்வி வாரியம் புதிய தேர்வு அட்டவணையை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறது. அப்போது, மத்திய அரசின் புதிய மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.