ஐ.ஐ.டி.,க்களில் சமஸ்கிருதம் :மத்திய அரசு அதிரடி உத்தரவு.
நான்கு வேதங்களில் இடம்பெற்றுள்ள, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கருத்துக்களை படிப்பதற்கு வசதியாக, ஐ.ஐ.டி.,க்களில், சமஸ்கிருத மொழியை அறிமுகப்படுத்தும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பண்டைய புராணங்கள் மற்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ள அறிவியல் கருத்துக்களை, மாணவர்களுக்கு பயிற்றுவிப்பது தொடர்பாகவும், சமஸ்கிருத மொழியை பாதுகாப்பது குறித்தும்ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி தலைமையிலான குழுவை, மத்திய அரசு அமைத்தது.
இக்குழு, ஆய்வு நடத்தி, அளித்த அறிக்கை விவரம்:
வேதங்களிலும், பல்வேறு ஹிந்து புராண நுால்களிலும் இடம்பெற்றுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்துக்களை படிக்க வசதியாக, நாடு முழுவதும், ஐ.ஐ.டி.,க்களில் சமஸ்கிருத மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும். சமஸ்கிருத மொழி வாயிலாக, ஹிந்து புராண நுால்களில் உள்ள தொழில்நுட்ப, அறிவியல் விஷயங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளிகள் மற்றும்கல்லுாரிகளில், வேதங்கள் மற்றும் புராண நுால்களில் இடம்பெற்றுள்ள விஷயங்களை, பாடவாரியாக போதிக்க வேண்டும்.நவீனகால படிப்புகளாக விளங்கும், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பாக, வேதங்களில் கூறப்பட்டுள்ளவிஷயங்கள், பள்ளி, கல்லுாரிகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதற்கு வசதியாக, ஐ.ஐ.டி., இந்திய அறிவியல் மையம், மத்திய பல்கலைகள், அனைத்து பொறியியல் கல்லுாரிகள் ஆகியவற்றில், சமஸ்கிருத பிரிவுகள் துவக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை அடிப்படையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., கல்வி மையங்களுக்கு அனுப்பிய உத்தரவில், 'வேதங்களில் கூறப்பட்டுள்ள அறிவியலை, மாணவர்கள் படித்து தெரிந்து கொள்ளும் வகையில், சமஸ்கிருத மொழியை பயிற்றுவிக்க, தனி பிரிவு துவக்கப்பட வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.லோக்சபாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்ஸ்மிருதி இரானி எழுத்து மூலம் அளித்த பதிலில், இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
தமிழில் ஏன் கூடாது? :
ஐ.ஐ.டி.,க்களில், சமஸ்கிருத மொழியை போதிப்பதற்கு, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.ஆர்.எஸ்.எஸ்.,சின் கொள்கையை திணிக்கும் வகையில், மத்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளதாக, இடதுசாரி மற்றும் காங்.கட்சிகள் கூறியுள்ளன.டில்லி மாநில துணை முதல்வரும், ஆம் ஆத்மி 'கட்சி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா, சமூக வலைதளமான, 'டுவிட்டரில் மத்திய அரசின் முயற்சியை, கிண்டலடித் துள்ளார். 'மத்திய அரசு, கம்ப்யூட்டர் மொழியை,தேசவிரோதமானது என அறிவித்து விடலாம்' என, தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., டி.ராஜா கூறுகையில், ''சமஸ்கிருதம் மட்டும் ஏன்? தமிழ் மொழியை ஏன் பயன்படுத்தக்கூடாது? ஆர்.எஸ்.எஸ்., கொள்கைப்படி, சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயல்கிறது. பார்லிமென்டில் இதுபற்றி விவாதிக்கப்பட வேண்டும்,'' என்றார்.காங்., மூத்த தலைவர் பிரமோத் திவாரி, ''ஐ.ஐ.டி., இன்ஜினியருக்கு, அவர் தொழிலில், சமஸ்கிருதம் அவசியமாக இருக்காது. இதுபோன்ற விஷயத்தை திணிப்பது சரியல்ல,'' என்றார்.