வாட்ஸ்அப் குரூப் தொடங்க லைசென்சு பெற வேண்டும்.
காஷ்மீர் மாநிலம் ஹண்ட் வாரா நகரில் சமீபத்தில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கலவரம் வெடித்தது.
கலவரத்தை அடக்க பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 5 பேர் பலியானார்கள். இதையடுத்து ஹண்ட்வாரா நகரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.
ஹண்ட்வாரா நகரில் கலவரம் உருவானதற்கு “வாட்ஸ்அப்”பில் பரவிய வதந்தியே காரணம் என்று தெரியவந்தது. மேலும் சிலர் வாட்ஸ்-அப் குரூப் மூலம் கலவரத்தை மற்ற பகுதிகளுக்கு பரப்பியதும் உறுதி செய்யப்பட்டது.
இதுபற்றி காஷ்மீர் மாநில உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது வாட்ஸ்-அப் வதந்திகளுக்குமுற்றுப்புள்ளி வைக்க கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.போலீசாரின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காஷ்மீரில் இனி வாட்ஸ்அப் குரூப் தொடங்க அரசிடம் விண்ணப்பித்து உரிய லைசென்ஸ் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது வாட்ஸ்அப் குரூப் நடத்தும் அட்மின்கள் 10 நாட்களுக்குள் தங்கள் குரூப் பற்றி தகவல் தெரிவித்து பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த குரூப்பில் உள்ளவர்கள் போடும் தகவல்கள் அனைத்துக்கும் அட்மின்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வதந்தியை பரப்பும் வகையில் வாட்ஸ்அப்பில் தகவல்கள் பரப்பினால் அட்மின் கைது செய்யப்படுவார் என்று காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.