குடிமைப் பணிகள் தேர்வுக்கான அறிவிக்கை தேதி ஒத்திவைப்பு.
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வுகள் தொடர்பான இந்த ஆண்டுக்கான அறிவிக்கை தேதி வெளியிடுவது எவ்வித காரணமும் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டுக்கான அகில இந்திய குடிமைப் பணிகள் மற்றும் இந்திய வனப் பணிகள் ஆகியவற்றுக்கான தேர்வுகள் (முதல் நிலை) தொடர்பான அறிவிக்கையை கடந்த 23-ஆம் தேதி (சனிக்கிழமை) வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது.இந்நிலையில், அறிவிக்கை வெளியிடும் தேதி ஒத்திவைக்கப்படுகிறது. அதாவது, மேற்கண்ட தேர்வுகள் தொடர்பான அறிவிக்கை பிறகு வெளியிடப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.குடிமைப் பணித் தேர்வுகளான இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) மற்றும் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்டவற்றை மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது.முதல் நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய 3 நிலைகளாக இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.