10 ஆண்டுகளுக்கு பிறகு வானில் அரிய நிகழ்வு சூரியனை புதன் கோள் 9-ந்தேதி கடக்கிறது.
10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு 9-ந்தேதி நடக்கிறது. இதனை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது.
புதன்கோள் கடக்கும் நிகழ்வு
புதன்கோள் சூரியனின் முன் நகரும் அரிய நிகழ்வு வருகிற9-ந்தேதி நடக்கிறது. இதனை அன்றைய தினம் மாலை 4.15 முதல் மாலை 6.20 வரை வானில் பார்க்கலாம்.புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும்.இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது. இந்த நிகழ்வை பார்ப்பதற்காக சென்னை பிர்லா கோளரங்கில் 4 தொலைநோக்கி கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
10 ஆண்டுகளுக்குப்பின்...
புதன்கோள் சூரியனை கடக்கும் நிகழ்வை வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் காணலாம். இந்தியாவில் சூரியன் மறையும்போது இந்த நிகழ்வை காணமுடியும்.வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்க நாடுகளில் சூரிய உதயம் ஆகும்போது காணமுடியும். இந்தியாவில் 1999-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி, 2003-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி, 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி இந்த அரிய நிகழ்வு நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அரிய நிகழ்வு நடக்கிறது.
அடுத்து எப்போது?
ஒரு நூற்றாண்டுக்கு 8 முறைதான் புதன்கோள் சூரியனை கடந்து செல்லும். அடுத்து 2019-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி இந்த நிகழ்வை காணலாம். அதன் பின்னர் 2032-ம் ஆண்டு நவம்பர் 13-ந்தேதி தான் புதன்கோள் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு நடக்கும்.மேற்கண்ட தகவலை சென்னை பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.