இந்திய வரைபடத்தில் பிழையா? : ரூ.100 கோடி அபராதம்; 7 ஆண்டு சிறை !
தவறான இந்திய வரைபடத்தை பயன்படுத்தினால், 100 கோடி ரூபாய் அபராதம் மற்றும், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.
பல்வேறு இணையதளங்கள், இணைய சேவைகளில், இந்திய வரைபடம் தவறாகக் காட்டப்படுகின்றன.
குறிப்பாக, அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, பாகிஸ்தானின் ஒரு
பகுதியாகவும் காட்டப்படுகின்றன.
இந்திய வரைபடத்தை தவறாகக் காட்டுவதை தடுக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக, நிலபரப்பு தகவல் கட்டுப்பாட்டு மசோதா கொண்டு வரப்பட உள்ளது.தற்போது, பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் கருத்தை அறியும் வகையில், இதற்கான வரைவு மசோதா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு மசோதாவின்படி, இந்திய எல்லைகளை, பரப்பளவை, சர்வதேச எல்லைகளை தவறாகக் காட்டும் வரைபடத்தை பயன்படுத்தும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு, ஒரு கோடி முதல், அதிகபட்சம், 100 கோடி ரூபாய் வரை அபராதம்விதிக்கப்படும். மேலும், அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப் படும்.
இதைத் தவிர, ஒவ்வொரு அமைப்பும், நிறுவனங்களும், தனிநபரும் வரைபடத்தை பயன்படுத்தும் முன், உள்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட உள்ள, புதிய குழுவின் ஒப்புதலை பெற வேண்டும். இதைத் தவிர, இது தொடர்பாக எந்த கோர்ட்டிலும் வழக்கு தொடர முடியாது; மேல்முறையீடு செய்ய முடியாது என்ற பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின், அடுத்த பார்லிமென்ட் கூட்டத் தொடரின்போது இந்த மசோதா தாக்கலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.