இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம்


          நாடு முழுவதும் மாணவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' இரண்டாம் கட்ட தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


             'அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, மருத்துவ நுழைவுத் தேர்வான, நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இதனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மருத்துவ கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டது. எந்த வித தயார்படுத்தலும் இல்லாமல் நுழைவுத் தேர்வை எப்படி எழுதுவது என, பிளஸ் 2 மாணவர்கள் தவித்தனர்.

இதையடுத்து, மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, இந்த ஆண்டு மட்டும் மருத்துவ நுழைவுத் தேர்வை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடத்த விலக்கு அளித்து, அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

ஏற்கனவே, மே, 1ம் தேதி நீட் தேர்வு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று அறிவித்தது. இந்த தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது.

நுழைவுத் தேர்வுக்கு விலக்கு பெற்ற மாநிலங்களில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளின் மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லுாரிகளிலுள்ள மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களில் சேர, இந்த தேர்வை எழுத வேண்டாம்.

அதே நேரம், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளிலுள்ள மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் தனியார் ஒதுக்கீட்டு இடங்களில் சேர, நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.

ஜூன், 21 வரை ஆன்லைனில், http://aipmt.nic.in/aipmt/Welcome.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூலை, 24ல் தேர்வு நடக்கும். மே, 1ம் தேதி தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறுவோமா என, சந்தேகத்தில் உள்ளவர்களும்; மே, 1ம் தேதி தேர்வில் பதிவு பெற்று, எழுதாதவர்களும் கூட இந்த தேர்வில் பங்கேற்கலாம். ஆங்கிலம் மற்றும்
இந்தியில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.


முதல் நாள் 6,000 விண்ணப்பம் 

விண்ணப்பம் வினியோகம் துவங்கிய முதல் நாளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 6,123 பேர் ஆர்வமுடன் விண்ணப்பங்கள் பெற்றனர்.

'நீட்' என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தியே, மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. மத்திய அரசு, ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வந்ததால், சிக்கல் தீர்ந்தது.

இதையடுத்து, மருத்துவக் கல்வி இயக்ககம், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள், சென்னை பல் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை துவக்கியது. எப்போது சிக்கல் தீரும் என, காத்திருந்த மாணவ, மாணவியர் விண்ணப்பம் வாங்க ஆர்வமுடன் குவிந்தனர். நேற்று முதல் நாளில், 6,123 பேர் விண்ணப்பங்கள் பெற்றனர்.

இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறுகையில், ''கடந்த ஆண்டில், 33 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்றனர். இந்த ஆண்டில், 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. ஜூன், 6ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்,'' என்றார்.



எம்.பி.பி.எஸ்., இடங்கள் திடீர் குறைப்பு

தமிழகத்தில், கடந்த ஆண்டில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளின், 2,665 இடங்கள்; எட்டு தனியார் கல்லுாரிகளில், 1,010 இடங்கள்; இ.எஸ்.ஐ., கல்லுாரி யில், 100 இடங்கள் என, மொத்தம், 3,765 எம்.பி.பி.எஸ்., இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு, முதற்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூன், 20ம் தேதி நடக்க உள்ளது.

* மதுரை அரசு கல்லுாரியில், 155 இடங்கள் இருந்தன. எம்.சி.ஐ., ஆய்வு நடத்தி, ஐந்து இடங்களை குறைத்து விட்டது

* அதேபோல், இன்னும் இரண்டு தனியார் கல்லுாரிகளுக்கு, எம்.சி.ஐ., அனுமதி தராததால், தனி யார் கல்லுாரிகளில், 250 இடங்கள் குறைந்துள்ளன. மொத்த இடங்களில், 255 குறைந்து, 3,510 இடங்களே உள்ளன.

இதுகுறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், ''இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், சுயநிதி கல்லுாரிகளுக்கான இடங்கள் அதிகம் குறைந்துள்ளன. கவுன்சிலிங் நடக்கும் முன், விடுபட்ட இடங்களுக்கு அனுமதி கிடைக்கவிட்டால், சுயநிதி கல்லுாரிகளுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்
அதிகரிக்கும்,'' என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank