மே 22ல் 'ஜே.இ.இ., அட்வான்ஸ்டு' தேர்வு: நகைகள் அணிந்து வர கட்டுப்பாடு
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எஸ்.எம்., போன்றவற்றில் சேர்வதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு வரும், 22ல் நடக்கிறது. இதில், பங்கேற்க கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஐ.ஐ.டி., -- என்.ஐ.டி., - - ஐ.ஐ.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - - பி.டெக்., படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த ஆண்டுக்கான, ஜே.இ.இ., முதன்மை தேர்வு, நாடு முழுவதும், ஏப்ரல், 3ல் எழுத்துத் தேர்வாகவும்; ஏப்ரல், 9, 10ல், 'ஆன்லைன்' வழியிலும் நடந்தது; இதில், 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழகத்தில், 7,000 பேர் இந்த தேர்வை எழுதினர். இதற்கான முடிவுகள், ஏப்ரல், 26ல் வெளியாகின. மொத்தம், 360 மதிப்பெண்களில், குறைந்தபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண், 100 என, அறிவிக்கப்பட்டது.
பொதுப் பிரிவில், 100; இதர பிற்படுத்தப்பட்டோரில், 70; தலித் இனத்தவரில், 52; பழங்குடியின மாணவர்களில், 48 என, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்றவர்கள், இரண்டாம் கட்ட ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே, 23 ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் இந்திய கனிம கல்வி நிறுவனமான, ஐ.எஸ்.எம்., ஆகியவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர முடியும். இந்த ஆண்டு, அட்வான்ஸ்டு தேர்வை, இரண்டு லட்சம் பேர் எழுத உள்ளனர்.
மே, 22ம் தேதி காலை மற்றும் மாலையில், இரண்டு தாள்களுக்கு தேர்வு நடக்கிறது.
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்கும், தேர்வர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
● 'மொபைல் போன், ஐ பேட், ஸ்மார்ட் போன், கால்குலேட்டர், டேப், வாட்ச், அபாகஸ்' மற்றும் வாய்ப்பாடு அட்டவணை உட்பட, எந்தப் பொருளும் கொண்டு வரக் கூடாது
● பெண்கள் காதணிகள், மூக்குத்தி, ஜிமிக்கி, பிரேஸ்லெட் போன்ற நகைகள் அணிந்து வரக்கூடாது
● பெரிய அளவில் பொத்தான் உடைய ஆடைகளை அணியக் கூடாது
● கறுப்பு பந்துமுனை பேனா (பால் பாய்ன்ட்), ஒரிஜினல் அடையாள அட்டை மற்றும், 'ஹால் டிக்கெட்' போன்றவற்றை மட்டுமே கொண்டு வர வேண்டும் என, தேர்வை நடத்தும் கவுஹாத்தி ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.