"கூடுதல் கட்டணம்: ரூ.300 கோடியை 535 பள்ளிகள் திருப்பி அளிக்க வேண்டும்'
தில்லியில் 535 பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணம் ரூ.300 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.
நீதிபதி அனில் தேவ் தலைமையிலான அந்தக் குழு, கடந்த ஆண்டு முதல் இதுவரை 10 இடைக்கால அறிக்கைகளை தில்லி அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லி கல்வித் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த இருப்பதாகக் கூறி, பெற்றோர்களிடம் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலித்ததாக 535 தனியார் பள்ளிகளை விசாரணை குழு அடையாளம் கண்டுள்ளது.
மேலும், இப்பள்ளிகள் மொத்தமாக ரூ.300 கோடி வரை பெற்றோர்களுக்கு திருப்பியளிக்க வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது. அதன்பேரில், கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை திருப்பியளிக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறோம். அதுமட்டுமன்றி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிதி விவகாரங்கள் குறித்த ஆவணங்களை விசாரணைக் குழு இதுவரை ஆய்வு செய்துள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.