தமிழ் மொழியை அஞ்சல் வழியில் உலகம் முழுவதும் பரப்புவது தொடர்பாக 5 கட்டளை

தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து என்ன பயன்?- தமிழக அரசுக்கு நீதிபதிகள் 5 கட்டளை

அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து 'உலகத் தமிழ் மாநாடு'நடத்துவதால் என்ன பயன்?" என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழ் மொழியை அஞ்சல் வழியில் உலகம் முழுவதும் பரப்புவது தொடர்பாக 5 கட்டளைகளை பிறப்பித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த ஆர்.லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழ் 'செம்மொழி' அந்தஸ்து பெற்று தன்னிகரில்லாத மொழியாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டை தவிர வேறு மாநிலத்தில் தமிழ் தெரிவதில்லை. மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் ரூ.50, ரூ.200 கட்டணத்தில் இந்தி மொழியை இந்தியா முழுவதும் அஞ்சல் வழியில் போதித்து வருகிறது. அதுபோல தமிழையும் சலுகைக் கட்டணத்தில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சைதமிழ் பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பினேன்.இந்த கோரிக்கையை நிறைவேற்ற தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ரூ.37.36 லட்சம் நிதி ஒதுக்கீடு கோரியுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை செயலர் மற்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழை வளர்க்க, உலகம் முழுவதும் பரவச் செய்ய தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம்செலவழித்து உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பயன்?முதல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாம் நூற்றாண்டில் தோன்றியது என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தமிழ் பிராமி எழுத்துகள் தோன்றியதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. 

6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 11 ஆயிரம் ஓலைச் சுவடிகள் தமிழ் தொன்மை வாய்ந்த செம்மொழி என்பதற்குகூடுதல் ஆவணங்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான், மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிஜி, மியான்மர், ஆப்பிரிக்கா, மாலத் தீவுகள், அமெரிக்கா என தமிழ் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. ஆனால் தமிழ் மொழி பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்களுக்குக் கூட தெரியவில்லை.ஹரியாணா உள்ளிட்ட பல வட மாநிலங்களில் தமிழ்தான் இரண்டாவது அலுவல் மொழியாக கடந்த 2010 வரை இருந்துள்ளது. தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது.எனவே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அது சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழரும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும்.

மாநில அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை யுடன் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளுக்கும், பிற இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்க்கவும் நிதி ஒதுக்க வேண்டும். தமிழறிஞர்களை அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பல் கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் தமிழை சலுகை கட்டணத்தில் உலகம் முழுவதும் கொண்டு செல்ல கோரியுள்ள நிதி ஒதுக்கீட்டை உடனடியாக செய்து கொடுத்து, மனுதாரரின் கோரிக்கையை 12 வாரத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)