கல்லூரிகளில் கட்டணமில்லா கல்வி ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்
பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள், கட்டணமில்லா கல்வித் திட்டத்தில் கல்லுாரிகளில் சேர, ஜூன், 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து, பல்கலை பதிவாளர் டேவிட் ஜவஹர் வெளியிட்டசெய்திக்குறிப்பு:
பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்காக, கல்லுாரிகளில், கட்டணமில்லாத கல்வித் திட்டத்தில், பட்டப் படிப்புகளை, 2010 - 11 கல்வி ஆண்டு முதல், சென்னை பல்கலை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில், நடப்பு கல்வி ஆண்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், சென்னை பல்கலையின் இணைப்பு பெற்ற அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் சேர, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாய மற்றும் கூலி வேலை பார்க்கும் பெற்றோரின் பிள்ளைகள், முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள், கணவனை இழந்த கைம்பெண் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகளுக்கு, இந்த திட்டத்தில் முன்னுரிமை தரப்படும். மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு http://www.unom.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.