746 பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்கக் கூடாது ஐகோர்ட்டில் வழக்கு.
விதிமுறைகளை பின்பற்றாத 746 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கக்கூடாது என்றும், அந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்றும் தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநர் நாராயணன் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அங்கீகாரம்தமிழகத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு ஒருமுறை என்ற ரீதியில் 2016-ம் ஆண்டு மே மாதம் வரை தற்காலிக அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின்நலன் கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அப்படியிருந்தும், இந்த 746 பள்ளிகள், அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக் கூட இதுவரை கடைபிடிக்கவில்லை. எனவே, இந்த 746 பள்ளிகளையும் வரும் கல்வியாண்டிற்குள் மூடிவிடவேண்டும். மே மாதத்திற்குப் பிறகு அந்த பள்ளிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது.அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
மாணவர்கள் சேர்க்கை
அந்த அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் பெயர் மற்றும் முகவரியை மக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும்.அப்பள்ளிகளில் புதிதாக மாணவர்களை சேர்க்க அனுமதிக்கக்கூடாது என கல்வித்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் பெயர் மற்றும் முகவரியை தமிழக கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நோட்டீசு
இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.விமலா ஆகியோர் விசாரித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழகபள்ளிக்கல்வித்துறை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீசுஅனுப்ப உத்தரவிட்டனர்.விசாரணை வருகிற ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.