மே 9 முதல் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்:
மே 9 முதல் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்: தேர்வுக் குழு தகவல்.
மருத்துவக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி மே 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கவுள்ள
து.
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு மே 9-ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேசிய தகுதிகாண் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனிடையே, மருத்துவ நுழைவுத் தேர்வு தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை வழக்கம்போல் பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம்
என இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. மருத்துவக் கவுன்சில் பரிந்துரையை ஏற்கும் முடிவு குறித்து வரும் திங்கள்கிழமை (மே 9) உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக மருத்துவ தேர்வுக்குழு அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை விநியோகம் செய்யக்கூடாது என்று தேர்வுக் குழுவுக்கு எந்தவித உத்தரவும் வரவில்லை. அதனால் ஏற்கெனவே அறிவித்தபடி, மே 9-ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழக சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றனர் அவர்கள்.