தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை:

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
அரசு உதவி பெறாத தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்
டவட்டமாகத் தெரிவித்தது.இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலையைத் தெளிவுபடுத்துமாறு இரு தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இந்த நிலையில், மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் கல்லூரிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில் ஆர். தவே, சிவகீர்த்தி சிங், ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.அப்போது மத்திய பள்ளிக் கல்வி வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி,"மருத்து பொது நுழைவுத் தேர்வை நடத்த முடியாது என மத்திய அரசு கூறவில்லை. தற்போதைய சூழலில் அதை நடத்துவதால் பல்வேறு சிரமம் ஏற்படும் என்பதே அரசின் நிலைப்பாடு' என்றார்.அவரைத் தொடர்ந்து இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விகாஸ் சிங், "இரண்டு கட்டங்களாக தேசிய தகுதி, நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்தமே 1ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வை எழுதிய மாணவர்கள், அதில் சரியாக செயல்படவில்லை என்று கருதினால் அவர்களை இரண்டாம் கட்டமாக ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கலாம்' என்றார்.குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், "மகாராஷ்டிரத்தில் மராத்தியிலும், குஜராத் மாநிலத்தில் குஜராத் மொழியிலும் மாணவர்கள் எழுதும் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் மொழி வழிக் கல்வியில் பயின்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களால் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வைஎழுத முடியாது. இந்த ஆண்டு நடத்தப்படும் தேர்வை ஓராண்டுக்காவது தள்ளி வைக்க வேண்டும். 

பழைய முறையிலேயே நிகழ் கல்வியாண்டில் சேர்க்கை நடைபெற அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டனர்.மேலும் சில மாநில அரசுகள் சார்பில் "ஏற்கெனவே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுதாமல் முந்தைய தேர்வு முடிவுகளின்படி நிகழாண்டில் மட்டும் சேர்க்கை நடைமுறைகளைத் தொடங்க அனுமதிக்க வேண்டும்' என கேட்டுக் கொள்ளப்பட்டது. சில தனியார் கல்லூரிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், ராஜீவ் தவான் ஆகியோர்,"உச்ச நீதிமன்றம் முன்பு அளித்த தீர்ப்பை திரும்பப் பெற்று மீண்டும் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி செல்லுமா? என்பதை ஆராய வேண்டும்' என்றனர்.இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாருக்கு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முன்னதாக, தேர்வு நடத்திய மாநில அரசுகளின் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிகழாண்டில் மட்டும் தொடரலாமா? என்பது பற்றி மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பதைக் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

அகில இந்திய மருத்து பொது நுழைவுத் தேர்வை (முதலாம் கட்ட தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு) எழுதிய மாணவர்கள், அதில் சரியாக செயல்படவில்லை எனக் கருதினால் அவர்கள் இரண்டாம் வாய்ப்பாக ஜூலை 24இல் நடத்தப்படும் தேர்வை எழுத அனுமதிப்பதில் தவறேதும் இல்லை. இரண்டு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ அதன் அடிப்படையில் சேர்க்கை நடைமுறையில் அந்த மாணவர்கள் பங்கு பெறலாம். ஆனால், அரசு உதவி பெறாத தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி கோருவதை ஏற்க முடியாது. அவை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)