பேஸ்புக், டுவிட்டர், லெக்கிங்ஸ்'சுக்கு தடை - தனியார் பள்ளியின் அதிரடி நிபந்தனைகள்.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், தனியார் பள்ளிகளில்தான் மாணவர்களை சேர்க்கவும், படிக்க வைக்கவும் பெற்றோர் விரும்புகின்றனர். இதனால், அப்பள்ளிகள், பலவிதமான கெடுபிடிகள் விதிக்கின்றன.
இந்த வரிசையில், சென்னை குரோம்பேட்டையிலுள்ள தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளி ஒன்று, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பல நிபந்தனைகள் விதித்துள்ளது. அதன் விவரம்: l எந்த மாணவரும், அவரது பெயரிலோ, பெற்றோர் பெயரிலோ, 'பேஸ்புக், டுவிட்டர், ஆர்குட், இன்ஸ்டாக்ராம்' போன்ற சமூக வலைதளங்களில், கணக்கு வைத்திருக்க கூடாது l ஏற்கனவே வைத்திருந்தால், உடனே அழித்துவிட வேண்டும். இதுதொடர்பாக பள்ளி வழங்கும் விண்ணப்பத்தில் உறுதி அளித்து, பெற்றோருடன் சேர்ந்து, கையொப்பமிட வேண்டும் l பள்ளிக்கு வரும்போது பணம் எதுவும் கொண்டு வரக் கூடாது. சைக்கிளில் வருவோர் மட்டும், 25 ரூபாய் பராமரிப்பு செலவுக்கு கையில் வைத்திருக்கலாம் l பள்ளிக்கு வரும்போது, சாக்லேட், கேக், பரிசுப் பொருட்கள் எதுவும் கொண்டு வரக் கூடாது. மாணவ, மாணவியர், உடலை இறுக்கும் படியான, 'லெக்கிங்க்ஸ்' போன்ற டைட் பிட்டிங் உடைகள், கையில்லாத, 'ஸ்லீவ் லெஸ்' உடைகளை அணிந்து வரக்கூடாது l விலை மதிப்புள்ள ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது l மொபைல் போன், டேப்லேட் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களும்
வைத்திருக்க கூடாது. இந்த உத்தரவுகளை மீறினால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் தாமதமின்றி பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவர். இவ்வாறு மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளன. பெற்றோருக்கான நிபந்தனைகள் l பள்ளிக்கு குழந்தைகளை அழைக்க வரும்போது, உடலை இறுக்கும் ஆடைகள் அணிந்து வரக்கூடாது l ஆண்கள் கைலி, பெர்முடா, அரைக்கால் சட்டை போன்ற அலுவலக பயன்பாட்டில் இல்லாத ஆடைகள் அணிந்து வரக்கூடாது l எந்த காரணத்தை கொண்டும், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களிடம் தேவையற்ற பேச்சு கூடாது. இவ்வாறு நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பள்ளி முதல்வர் கூறுகையில், 'இந்த நிபந்தனைகள் அனைத்தும், மாணவர் மற்றும் பெற்றோர் நலனுக்காகவே விதிக்கப்பட்டுள்ளன. வீட்டில், பெற்றோர் உதவியுடன் இணையதளத்தை பயன்படுத்த தடையில்லை. எங்கள் பள்ளிக்கு வரும் மாணவர்கள் நல்லவர்களாக, சமூகத்தில் நல்ல அந்தஸ்து மிக்கவர்களாக வளர, இந்த கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம்' என்றார்.