இஸ்ரோ’ விஞ்ஞானிகள் புதிய சாதனை; விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் ராக்கெட் சோதனை வெற்றி.

சென்னை, 
மீண்டும் பயன்படுத்தக் கூடியவகையில், விண்ணுக்கு சென்று விட்டு பூமிக்கு திரும்பும் ராக்கெட் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளின் இந்த புதிய சாதனைக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புதிய ராக்கெட்


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைக்கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்த ராக்கெட்டுகளில் செயற்கைக்கோள்களை பொருத்தி விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தி வருகின்றனர். 


பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும், இந்த வகை ராக்கெட்டுகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். அவை செயற்கைக்கோள்களை அதன் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தி விட்டு, விண்ணிலேயே வெடித்துச் சிதறிவிடும். 


இதை தவிர்ப்பதற்காக மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் (மறுபயன்பாடு விண்வெளி செலுத்து வாகனம்) வகையில் ‘ரீயூசபிள் லாஞ்சிங் வெகிகிள்- டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர்’ (ஆர்.எல்.வி-டிடி) என்ற பெயரில் புதிய ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற ராக்கெட்டுகளை பயன்படுத்தி உள்ளன.


விண்ணில் ஏவப்பட்டது


முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட்டை சோதித்து பார்ப்பதற்கான ‘கவுண்ட்டவுன்’ நிறைவடைந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று காலை 7 மணியளவில் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 


செங்குத்தாக விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த ராக்கெட், ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் சென்றது. 45 கிலோ மீட்டர் தூரத்தை எட்டியதும் ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த பூஸ்டர்கள் தனித்தனியாகப் பிரிந்து வங்க கடலில் விழுந்தன. அதன் பிறகும் ராக்கெட் 65 கிலோ மீட்டர் உயரத்துக்கு மேல் பறந்தது. 


பின்னர், திட்டமிட்டப்படி ராக்கெட் விண்ணில் இருந்து பூமியை நோக்கி திரும்பி வங்க கடலில் 450 கிலோ மீட்டர் தூரத்தில் வந்து விழுந்தது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 770 வினாடி நேரத்தில் (12 நிமிடம் 50 வினாடி) பயணம் முடிந்து விட்டது. அதன் பயணம், பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. 


தண்ணீரில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்படாததால், தண்ணீரில் மோதி, ராக்கெட் உடைந்து விட்டது. எனவே, அதை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இனிமேல் உருவாக்கப்படும் ராக்கெட்டுகள், மறுபயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


இந்த ராக்கெட் 1.75 டன் எடை கொண்டது. இதன் முதல் பகுதி ‘சாலிட் புரோபலன்ட் பூஸ்டர்’ ராக்கெட்டாகவும், 2-ம் பகுதி 6.5 மீட்டர் நீளம் கொண்ட விமானத்தின் முன்பகுதி போன்றும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பார்ப்பதற்கு ராக்கெட்டின் உச்சியில் அமர்ந்திருக்கும் விமானம் போல காட்சி அளித்தது. 


இந்த ராக்கெட், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் முதல்படி மட்டுமே ஆகும். இது, இறுதி வடிவம் பெறுவதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். இறுதி வடிவ ராக்கெட், தற்போது உள்ளதை விட 6 மடங்கு பெரிதாக இருக்கும். 


ஏவும் செலவு குறையும்


இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- 


இது, 1980-ம் ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட்ட எஸ்.எல்.வி- 3 ராக்கெட்டை போன்ற எடையில் இருக்கும். முதலில் பூமியில் இருந்து ராக்கெட்டை போல ராக்கெட் புறப்படும். அதன்பின் விண்ணில் 70 கி.மீ. தூரத்தை தொட்டதும், ஆர்.எல்.வி.யின் பூஸ்டர் பிரிந்து ராக்கெட் தனியாக பறக்கும் தன்மை கொண்டது. 


ராக்கெட்டின் முதல் சோதனை வெற்றி பெற்றுள்ளதால், செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான செலவு 10 மடங்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ரூ.95 கோடி


அதற்கான முதல் அடியை தான் தற்போது எடுத்து வைத்துள்ளோம். விஞ்ஞானிகளின் 5 ஆண்டுகால கடின உழைப்பில் ரூ.95 கோடி செலவில் உருவான, இந்த ராக்கெட் பூமிக்கு திரும்பும் போது உராய்வினால் ஏற்படும் வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது. 


இதற்காக விண்கலத்தின் வெளிப்புறத்தில் 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் தாங்கும் ஓடுகள் வேயப்பட்டுள்ளதால் மிக பாதுகாப்பாக தரை இறங்கியது. இது இஸ்ரோவின் அடுத்த சாதனையாகும்.


இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.


ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு


இந்த சாதனைக்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகள். எதிர்காலத்திலும் அவர்கள் சாதனை படைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.


துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘நமது விஞ்ஞானிகளின் முயற்சியால், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது ராக்கெட் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு உணர்வு பிரமிக்கத்தக்கது’ என்று கூறியுள்ளார்.


சோனியா, ராகுல்


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் விஞ்ஞானிகளுக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022