அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: தனியார், மெட்ரிக் பள்ளிகள் பின்னடைவு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த ஆண்டை விட, இம்முறை மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம், தனியார், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் தேர்ச்சி குறைந்துள்ளது.
தமிழகத்தில், 2011ம் ஆண்டு, அனைத்து பள்ளிகளிலும், சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி, அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும், சமச்சீர் பாடத்திட்டத்தின் படியே மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், பிளஸ் 1, பிளஸ் 2வில் மட்டும், மாநில பாடத்திட்டத்தில் பாடங்கள் நடத்தியுள்ளன.
இந்த பள்ளிகளின் பட்டியலும், முதல் முறையாக தேர்வுத்துறை பட்டியலில் தனியாக குறிப்பிடப் பட்டுள்ளன.நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் படி, தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களில், 97.89 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
எனினும், கடந்த ஆண்டை ஒப்புடுகையில், இந்த ஆண்டு தனியார், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதே நேரம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது.
248 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி: பிளஸ் 2 தேர்வில், தமிழகம் முழுவதும், 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளன. தமிழகம் முழுவதும், 2,704 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 3 லட்சத்து, 47 ஆயிரத்து, 478 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களின், இரண்டு லட்சத்து, 97 ஆயிரத்து, 641 பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள், கடந்த ஆண்டை விட அதிக தேர்ச்சி பெற்றுள்ளன.
இந்த ஆண்டு, 85.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 248 அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளன. கடந்த ஆண்டு, 196 பள்ளிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, பள்ளிக்கல்வித் துறையின் முயற்சியால், கூடுதலாக, 52 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளன.
வளர்ச்சி பாதையில்...:கடந்த, 2012ல், 41 அரசு பள்ளிகள் மட்டுமே, 100 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து, இந்த ஆண்டு, 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.