முடிவு தெரியாமல் தவிக்கும் மதுரை காமராஜ் பல்கலை மாணவர்கள்.
மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியில் 2014 - 15ம் ஆண்டில் 1,916 மாணவர்கள் நேரடி சேர்க்கை மூலம் தேர்வு எழுதினர்.
இதில் பலர் போலி சான்றிதழ் சமர்ப்பித்தனர். அதற்காக தொலைக் நிலைக் கல்வி மையங்களுக்கும், பல்கலையின் முக்கிய நபர்கள் சிலருக்கும் பல லட்சம் ரூபாய் கைமாறியதாக புகார் எழுந்தது.
இதனால் நேரடி சேர்க்கை தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் உண்மை சான்றிதழ் சமர்ப்பித்து, நியாயமாக தேர்வு எழுதிய மாணவர்களும் முடிவு தெரியாமல் ஓராண்டுக்கும் மேலாக தவித்து வருகின்றனர்.இந்நிலையில் ’மாணவர்கள் சான்றிதழை பல்கலைகள் நிறுத்தி வைப்பது தண்டனைக்குரியது. தேர்வு எழுதிய பின் பட்டச் சான்றிதழ்கள் வழங்க 180 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என யு.ஜி.சி., அனைத்து பல்கலைகளுக்கும் எச்சரிக்கை விடுத்தது.
இதன் பின், இப்பல்கலையில் தேர்வு எழுதியவர்கள் மே 20க்குள் சந்தேக விண்ணப்பதாரர்கள் உண்மை சான்றிதழை சமர்ப்பிக்க தொலை நிலைக் கல்வி மையங்களுக்கு பல்கலை உத்தரவிட்டது.இதன் தொடர்ச்சியாக, 400 பேருக்கு சான்றிதழ்கள் குறித்து விளக்கம் கேட்டு பல்கலை நடவடிக்கை எடுத்தது. மீதமுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ்களை சமர்பித்திருக்கலாம் என முடிவு செய்தது.இதனால், நியாயமாக எழுதிய 200 பேரின் தேர்வு முடிவுகள் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் ’ஜவ்வாக’இழுக்கப்படுவதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது: 2015 மே மாதம் தேர்வு எழுதினோம். ஜூனில் முடிவு அறிவிக்கப்பட்டிருந்தால் சென்ற கல்வியாண்டே மேல் படிப்பிற்கு விண்ணப்பித்திருக்கலாம். முடிவு தெரியாததால் 2வது ஆண்டாக மேல்படிப்பில் சேர முடியாமல் தவிக்கிறோம். இதுகுறித்து யு.ஜி.சி.,க்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பி வருகிறோம், என்றனர்.