ஓட்டுப்பதிவு முடிந்ததும் செய்ய வேண்டியது என்ன?
ஓட்டுப்பதிவு முடிந்த பின், சில ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், 'குளோஸ்' பொத்தானை அழுத்தி, ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்துவதில்லை.
இதனால், முறைகேடு நிகழ்ந்துள்ளதாக, சிலர் சந்தேகம் கிளப்பும் சம்பவங்கள், கடந்த காலத்தில் நடந்தன.
அத்தகைய சந்தேகங்கள், இத்தேர்தலில் ஏற்படுவதை தவிர்க்க, தேர்தல் கமிஷன் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன் விவரம்:
● ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும், அனைத்து ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களும், அப்போது அங்கு இருக்கக்கூடிய ஓட்டுச்சாவடி முகவர்கள் முன்னிலையில், 'குளோஸ்' பொத்தானை அழுத்தி, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை நிறுத்த வேண்டும்
● அனைத்து ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களும், ஓட்டுப்பதிவின் முடிவில், 17 ஏ படிவத்தின் இறுதிப்பதிவுக்கு பின், கோடு ஒன்றை வரைய வேண்டும். அதன்பின், தொடர் எண் அறிக்கையில் கையெழுத்திட்டு, அனைத்து ஓட்டுச்சாவடி முகவர்களின் கையெழுத்துகளையும் பெற வேண்டும்
● பதிவு செய்யப்பட்ட, ஓட்டுகளின் கணக்கு விவரங்களின் (படிவம் 17 சி) சான்றொப்பமிட்ட நகல் ஒன்றை, ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.