ஏசி வாங்கப் போறீங்களா?


ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டிகளில் / அமைப்புகளில் பலவகைகள் இருக்கிறது. நாம் பெரும்பாலும் வீட்டில் பயன்படுத்தும் ஏசிக்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.


01. விண்டோ ஏசி எனப்படும் ஜன்னல்களில் பொருத்தப்படும் ஒரே யூனிட் வகை.

02. ஸ்பிலிட் எனப்படும் இரண்டு யூனிட்கள் கொண்ட வகை.
விண்டோக்கள் பெரும்பாலும் மக்களால் விரும்பப் படுவதில்லை, அதிக சப்தம், 
ஜன்னல்களில் பொருத்த முடியாதது, பெரிய ஸ்டார் ரேட்டிங், இன்வெர்டர் மாடல்கள் இல்லாதது போன்றவைகளாலும், 'ஸ்பிலிட்தாங்க பெஸ்ட்டு' என்று அபிமான 'இந்தியாவின் நம்பர் ஒன் டீலர்கள்' என்று அழைத்துக்கொள்ளும் டீலர்களாலும் சொல்லப்படுவது.

ஆனால், விண்டோ ஏசிக்கள் பராமரிக்க எளிதானவை, விலை குறைவு.

சரி, ஸ்பிலிட் ஏசிக்கள்:

இவற்றின் இரண்டு வகை:

01. வழக்கமான ஸ்பிலிட் ஏசிக்கள். இவை ஸ்டார் ரேட்டிங்கை அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. 1 ஸ்டார் என்றால் விலை குறைவு. 5 ஸ்டார்கள் என்றால் விலை அதிகம்.

{{{ஸ்டார் ரேட்டிங் குறைவு = அதிக மின்சார செலவு.}}}

{{{ஸ்டார் ரேட்டிங் அதிகம் = குறைந்த மின்சார செலவு.}}}

இதிலும் ஒரு சிறிய சிக்கல் இருக்கிறது. இந்த வருட 5ஸ்டார் மாடல்கள் அடுத்த வருடம் 4 ஸ்டார் ஆகிவிடுகின்றன. அதைப் பின்னர் பார்ப்போம். ஒரு விண்டோ ஏசியை இரண்டாக பிரித்து கம்ப்ரசரை வெளியிலும், ப்ளோயர் என்றழைக்கப்படும் குளிர்ந்த காற்றை அறையில் சர்குலேட்/பரவச்செய்யும் யூனிட்டை உள்ளேயும் பிரித்தால் அது ஸ்பிலிட் ஏசியாகிவிடுகிறது.
அதிக சப்தமெழுப்பும் கம்ப்ரசர் வெளியே இருப்பதால் இன்டோர் யூனிட் அமைதியாக தூக்கத்தைக் கெடுக்காத அளவியே சப்தமெழுப்பி, குளிர்ந்த காற்றைத் தருகிறது.

02. இன்வெர்டர் மாடல் ஸ்பிலிட் ஏசிக்கள்:கரன்ட் போச்சுன்னா இன்வெர்டர்ல ஓடுமா சார் என்று அப்பாவியாகக் கேட்கும் மக்களை ஏசி ஷோரூம்களில் அதிகம் பார்க்கலாம். இன்வெர்டர் என்பது ஒரு டெக்னாலஜி. வீட்டில் இருக்கும் 800 வாட்ஸ் இன்வெர்ட்டரில் இந்த ஏசியை கனெக்ஷன் கொடுத்து மின்சாரம் போனால் இயக்க முடியாது.

எளிய என்னுடைய (பாமர) விளக்கத்தைப் பார்ப்போம்.

சாதாரண விண்டோ அல்லது ஸ்பிலிட் ஏசிக்களில் நீங்கள் ஒரு அறை வெப்ப நிலையை தேர்வு செய்கிறீர்கள். உதாரணமாக உங்களின் அன்றைய வெளி வெப்ப நிலை 38 டிகிரி. நீங்கள் 25 டிகிரிக்கு உங்கள் அறையை குளிரூட்ட விரும்புகிறீர்கள். ஏசியில் அந்த 25 டிகிரியை நீங்கள் உள்ளிட்டு இயக்கும்போது கம்ப்ரெசர் இயங்கி அந்த மூடப்பட்டுள்ள அறையிலுள்ள காற்றை சர்குலேட் செய்து அறை வெப்பத்தை 38லிருந்து 25ஆகக் குறைக்கிறது.

இந்த சரியான அளவு வரும் வரை கம்ப்ரஸர் முழுத் திறனோடு (மின்சாரத்தை முழுங்கியபடியே) இயங்கிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் உள்ளிட்ட 25டிகிரியைத் தாண்டி 24 டிகிரிக்கு வந்த உடன் கம்ப்ரசர் தனது இயக்கத்தை நிறுத்திக்கொன்டு, ப்ளோயர் என்றழைக்கப்படும் உள்ளிருக்கும் ஃபேனை மட்டுமே ஓடச் செய்து குளிர்காற்றை பரவச் செய்கிறது.

அறையில் இருக்கும் நபர்களின் உடல் வெப்பம், அறைக்கு வெளியே இருக்கும் உடல் வெப்பம், அறையில் நீங்கள் அடைத்து வைத்துள்ள துணிகள், இரும்பு பீரோ, இன்ன பிற குளிரைக் கடத்தி உள்ளிழுக்கும் சாதனங்களால், அறையிலிருக்கும் காற்று வெளிச்செல்லும் ஓட்டைகளால் அந்தக் குளிரின் அளவு குறைய ஆரம்பிக்கும். அது மீண்டும் நீங்கள் உள்ளிட்ட 25 ஐ தாண்டி 26 டிகிரியை அறைவெப்பம் தொட்ட உடன் மீண்டும் கம்ப்ரெசர் இயங்க ஆரம்பித்து உங்களுக்குத் தேவையான குளிர் அளவான 25 டிகிரிக்கு மீண்டும் கொண்டுவரும் வரை அது இயங்குகிறது.

இதற்கு அறையில் காற்றை உள்ளிழுக்கும் இடத்தில் ஒரு சென்சர் பொருத்தப்பட்டிருக்கும். இதை குழப்பி அடித்து உடலை வற வறவென்று வறட்சியடையவைக்க நம்மாட்கள் ஏசியோடு கூடவே ஹைஸ்பீடு 5ம் நம்பரில் பேனையும் போட்டுக்கொண்டு கம்பளியை காது வரை போத்திக்கொன்டு தூங்குவார்கள். அது சீலிங்கில் இருக்கும் வெப்பத்தை எல்லாம் கர்ம சிரத்தையாக அறைக்குள் இறக்கி ஏசி சென்சரை படாதபாடு படுத்தி கம்ப்ரசரை கதறடிக்கும்.

இங்கே கவனிக்கவேண்டிய விசயங்கள் இரண்டு:

01. ஒவ்வொருமுறையும் 1டிகிரி வெப்பநிலை முன்னும் பின்னும் செல்வதால் பலருக்கு ஏசியில் தொடர்ந்த கம்பர்டபிளான கூலிங் அல்லது உறக்கம் இல்லாமல் போகிறது. அல்லது பழகிவிடுகிறது. முழுவீச்சில் பேன் ஓடுவதால், அறைக்குள் வெளிக்காற்று வராததால் ஒருவிதமான Suffocation இருக்கும். ஏசி ஓடும்பொழுது பேன் உபயோகிக்கவே கூடாது என்பது இதற்காகத்தான்.

02. ஒவ்வொருமுறை கம்ப்ரஸர் இயங்கும்பொழுது அதனளவில் இருபங்கு மின்சாரத்தை அது எடுக்கும், ஸ்டார்ட்டிங் லோட் என்று இதற்குப் பெயர். உங்கள் ஏரியாவில் விலையில்லா லோ வோல்டேஜ் இருந்து அந்த ஏரியாவில் 500 வீடுகளில் ஏசி இருந்து ஒவ்வொருன்றும் இப்படி இயங்கும்போது எவ்வளவு வோல்டேஜ் ப்ளக்சுவேஷன் வரும் என்பதை நினைத்துப் பாருங்கள். அல்லது வரும் சம்மரில் ஒரு குன்டு பல்பை மாட்டி ஆராய்ச்சி செய்து பாருங்கள். ஓரளவு விவரம் அறிந்தவர் என்றால் ஒரு மல்டி மீட்டர் வைத்து வோல்டேஜ் அளவுகள், ஸ்டார்ட்டிங் & ரன்னிங் கரன்ட் ஆம்ப்ஸ் எவ்வளவு என்று பாருங்கள். அதை உங்கள் ஏசி மானுவலோடு ஒப்பிடுங்கள். போக ஒவ்வொருமுறை இப்படி கம்ப்ரஸர் ஓடி நின்று உழைக்கும்போது அதன் வாழ்நாளும் குறைகிறது.

சரி, இன்வெர்டர் மாடல் / டெக்னாலஜி என்ன செய்கிறது?

இன்வெர்டரில் கம்ப்ரசரை டிசி கரன்டில் தொடர்ந்து ஓடுவதுபோல வடிவமைத்திருக்கிறார்கள். அதாவது மேலே உள்ள உதாரணத்தின்படி நீங்கள் உங்களுக்குத் தேவையான அறை வெப்பத்தை 25டிகிரிக்கு செட் செய்யும்பொழுது, இன்வெர்டர் ஏசியானது முதலில் கம்ப்ரசரை முழு கொள்ளளவில் இயக்கி மிக விரைவாக 25 டிகிரிக்கு அறை வெப்பத்தைக் கொண்டுவருகிறது. அதன்பின்னர் மற்ற இன்வெர்டர் அல்லாத மாடல்களைப் போல அது கம்ப்ரஸரின் இயக்கத்தை நிறுத்தாது அதன் ஆர் பி எம் குறைத்து (வேகத்தைக்) தொடர்ந்து கம்ப்ரசரை இயக்கச் செய்கிறது.

இதனால் என்னாகும்? 25 டிகிரி குளிர்ச்சி என்பது தொடர்ந்து மெயின்டைன் ஆகும். அதே சமயம் கம்ப்ரசர் வேகம் குறைவதால் மின்சாரத்தைப் பயன்படுத்தும் அளவு குறையும். 1.5 டன் இன்வெர்டர் ஏசி சரியாகப் பயன்படுத்தப்படும்பொழுது 1 மணி நேரத்திற்குள்ளாகவே வெறும் 300-500 வாட்ஸில் இரவு முழுவதும் இயங்கி உங்களுக்கு மின்சார சிக்கனத்தோடு சிறந்த தொந்தரவில்லாத கூலிங்கையும் வழங்குகிறது.

டிசியில் இயக்கப்படும் இந்த டெக்னாலஜிக்கு 'இன்வெர்டர் டெக்னாலஜி' என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல பல மாடல்களில் இரண்டு அல்லது மூன்றுவிதமான செட்டிங்குகள் இருக்கிறது  (Eco Mode). அதாவது ஒரு 1.5டன் இன்வெர்டர் ஏசியை 0.75டன், 1.0டன், 1.5 டன் என்று மூன்றுவிதமாக உங்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்த முடியும். அதற்கேற்ப மின்சார சிக்கனம் உங்களுக்குக் கிடைக்கும். இன்றைக்கு உங்கள் அறை 100 ஸ்கொயர் பீட்டில் இருந்து அடுத்த வருடம் 150க்கு மாறுவீர்கள் என்றால் ஒரு 1.5டன் இன்வெர்டர் ஏசியை முதல் ரூமில் 1டன் செட்டிங்கிலும், 150 ஸ்கொயர் பீட் ரூமிற்கு மாறும்பொழுது 1.5டன் செட்டிங்கிலும் மாற்றிக்கொள்ள முடியும். :)

சரி விலை வித்தியாசம் என்ன?

கிட்டத்தட்ட இரு மடங்கு என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருக்கிறது." பரவாயில்லை சார், கரன்ட் மிச்சமாகுதே", என்று வாங்கப் போகிறீர்களா? வெயிட் மாடி. அடிக்கடி திறந்து மூடும் இடங்கள், வருடத்திற்கு 2-4 மாதங்கள் மட்டுமே பயன்படுத்துவோம் என்ற சீதோஷ்ண நிலையில் இருப்பவர்களுக்கெல்லாம் இன்வெர்டர் மாடல் சாதா மாடல்களை விட செலவு அதிகம் வைக்கும். :) ஒருநாளைக்கு 6-8 மணி நேரம், வருடத்திற்கு 6 மாதங்கள் தினப்பயன்பாடு என்று தேவைப்படுபவர்களுக்கு இன்வெர்டர் ஏசி சிக்கனமானது.
சரி மற்றவர்கள் என்ன வாங்கலாம்?

உங்களுடைய பயன்பாடு வருடத்திற்கு 2 முதல் அதிகபட்சம் 4 மாதங்கள் என்றால் ஒரு நல்ல செகன்ட் ஹான்ட் ஏசி, புதியது என்றால் 2 அல்லது 3 ஸ்டார் ஏசியே போதுமானது. அதற்கு மேல் என்றால் இன்வெர்டர் போகலாம். ஜன்னலில் பொருத்தக்கூடிய வசதி இருந்தால் விண்டோ ஏசியே எதேஷ்டம்.

எவ்வளவுக்கெவ்வளவு அறையில் பொருட்கள், துணிகள், இரும்பு கட்டில், பீரோ போன்ற பொருட்கள் இல்லாமல் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு ஏசி துரிதமாக வேலை செய்து குளிரை அறையில் தக்கவைக்கும். ஏசியை வெயில் காலத்தில் பயன்படுத்துவதற்கு முன்பாக தூசி இல்லாமல் அறையை சுத்தம் செய்வது, அடிக்கடி ஏசியின் ஏர்பில்டரை சுத்தம் செய்வது, சரியான நேரத்தில் சர்வீஸ் செய்துகொள்வது. கம்பெனியில் ஏ எம் சி எனப்படும் வருடாந்திர பராமரிப்பு போட்டுக்கொள்வது, சரியான பில், வாரன்டிகளை ஒரு பைலில் போட்டு, கம்பெனிக்காரர்கள் சர்வீஸ் செய்யவரும்பொழுது தரும் ரிப்போர்ட்களை பத்திரப்படுத்திவைப்பது, ஏதேனும் சரியில்லை என்றால் சரியான முறையில் புகார் அளிப்பது போன்றவைகள் உங்கள் ஏசியை வருடக்கணக்கில் பயன்படுத்த உதவும்.

லோவோல்டேஜ் பிரச்சனை இருப்பவர்கள் அந்த வோல்ட்டேஜ் ஏற்ற இறக்கத்திற்குத் தக்க ஸ்டெபிலைசர்களை பயன்படுத்துவது நல்லது.
ஏசி இன்ஸ்டலேஷன் மிக முக்கியம் சரியான முறையில் பொருத்தப்படாத ஏசிக்களில் பல பிரச்சனைகள் வரும், சரியான தரவுகளுடன் கம்பெனிக்குப் புகார் அளித்து நோண்டி நொங்கெடுத்து உங்கள் உரிமையைப் பெறவேண்டியது உங்கள் பொறுப்பு.

காப்பர் காயிலா அலுமினியமா என்பது பெரிய கேள்வி, சரியான பதில்கள் கிடைப்பதில்லை, காப்பர் வாழ்நாள் அதிகம், லீக் ஆனால் எளிதில் பற்றவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். அலுமினியத்தில் அந்த வசதி இல்லை, இருந்தாலும் அது அடிக்கடி பழுதடையும் எனவே இதை சரிபார்த்து வாங்குவது உங்கள் சமர்த்து.

ஏசி கம்ப்ரஸர்களில் பயன்படுத்தப்படும் கேஸ் மூன்றுவிதம். ஓசோனில் ஓட்டை போடும் என்று பரவலாகப் பயன்படுத்தப்பட்ட R22 வகை இப்பொழுது வழக்கொழிந்து வருகிறது. R410 A பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. டெய்கின்ஏசிக்களில் R32 என்ற வகையைப் பயன்படுத்துகிறார்கள். (இன்னும்கூட சில வகைகள் உண்டு).

விலைகுறைவான ஏசிக்களில் R22 உடன் அலுமினியம் காயில் இருக்கலாம். இன்னும் பல தொழில்நுட்ப தில்லாலங்கடிகள் இருக்கலாம். அலசி ஆராய கூகுளாண்டவரை நாடவும் :)

நீங்கள் ஏசி வாங்கத் தயாராவதற்கு முன்பு நீங்கள் எங்த அறையில் ஏசியைப் உபயோகப்படுத்தப் போகிறீர்களோ அங்கே எத்தனை ஜன்னல்கள் இருக்கிறது, வெயில் படும் கிழக்கு, மேற்கில் எத்தனை? கதவுகள் எத்தனை, அறையில் சதுர அடி எவ்வளவு? ரூப் உயரம் எவ்வளவு? மேலே மொட்டைமாடியா? வீடு இருக்கிறதா? வேறு ஏதேனும் திறப்புகள் உள்ளதா? நீங்கள் வசிக்கும் நகரம், அதன் கோடைக்காலம் போல பல விசயங்கள் கருத்தில்கொள்ளவேண்டும்.
ஏசி வாங்கிவிட்டோமே என்று 15 டிகிரியில் செட் பண்ணி கம்பளி போத்திக்கொன்டு உறங்கக்கூடாது. ஏசிக் காற்று நேரடியாக உடலில் / முகத்தில்/ காதில்படும்படி உறங்கக்கூடாது. தொடர்ந்து ஏசி உபயோகப்படுத்தும் அறையின் ஜன்னல்களை அடிக்கடித் திறந்து வெயில்/வெளிச்சம் உள்ளே வர வழிவகை செய்யவேண்டும். பயன்படுத்தப்படும் படுக்கை விரிப்புகளை சுடுநீரில் அலசி அடிக்கடி துவைக்க வேண்டும். உடலை உறுத்தாத ஆரோக்கியமான கூலிங் என்பது 25-27 டிகிரி என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் :)

இவ்வளவு சொல்லும் நான் என்ன ஏசி உபயோக்கிறேன் என்ற கேள்வி உங்களுக்கு வரும். இரண்டுவருட ஆராய்ச்சிக்குப் பிறகு, சென்னைக்கு அருகில் 280 சதுர அடி ஹாலுக்கு நான் உபயோகிப்பது 1.5 டன் ஷார்ப் இன்வெர்டர் ஏசி (18XP-PHTஅந்த மாடல் இப்பொழுது வருவதில்லை) 12 பேர் இரவில் அந்த ஹாலில் உறங்கியபோதும், நான் செட் செய்த டெம்பரேச்சர் அளவு 27 டிகிரி, யாருக்கும் எந்த உபத்திரவமும் இல்லை. 14 மணி நேரத்தில் செலவான மின்சார யூனிட் அளவு 12.

280 சதுர அடிக்கு 1.5 டன் அதுவும் சென்னைக்கு அருகில், அதுவும் மொட்டை மாடி மூன்று ஜன்னல்கள், இரண்டு கதவுகள், 12 நபர்கள் வெறும் 14 மணி நேரத்தில் 12 யூனிட்கள் என்று சொன்னால் ஏசி விற்பனை செய்பவர்கள் மயங்கி விழுவார்கள். :)

இறுதியாக,

நாங்க ஏசி வாங்கற அளவுக்கு இல்லீங்க சார், ஏர் கூலரே போதும் என்பவரா நீங்கள்? நீங்கள் செய்வது மிகப்பெரிய தவறு.

சென்னை போன்ற அதிக ஈரப்பதம் உள்ள ஊர்களில் வசிப்பவர்கள் ஏர் கூலர் வாங்குவது பிரயோஜனமில்லாதது. இந்தியாவின் நம்பர் ஒன் டீலர்கள் எல்லோரும் வாசலில் முதலில் கண்ணில்படும்படி ஏர்கூலரை வைத்திருக்கும் அபத்தம் சென்னையில் அதிகம் காணக்கிடைக்கிறது. ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு போன்ற கடல் அருகில் இல்லாத ஈரப்பதம் குறைந்த இடங்களில் ஏர்கூலர் ஏசியை விட அற்புதமாக குளிர்ச்சியைத் தரும். சென்னை போன்ற கடலருகில் இருக்கும் ஈரப்பதம் அதிகமிருக்கும் ஊர்களுக்கு ஏர்கூலர் கசகசவென்று எரிச்சலையே தரும். கூடவே இலவசமாக உடல்நலக்கோளாறுகளும் வரலாம்.

ஆக, நீங்கள் ஏர் கூலர் வாங்குவதற்குப் பதில் கோடை துவங்கும் முன்பாக ஷேட் நெட் எனப்படும் பச்சை வலையை வாங்கி வந்து மொட்டை மாடியில் பந்தல் போல அமைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மொட்டை மாடி அளவுக்கேற்ப சுண்ணாம்பும், பெவிகாலும் வாங்கி கலந்து மொட்டை மாடித் தரையில் முழுவதுமாக அடித்துவிடுங்கள், வெயில் 45 டிகிரி அடித்தாலும் தரையில் சூடு இறங்காது, எனவே இரவில் சீலிங் மூலமாக உங்கள் வீடு இட்லி குண்டானாக அவிந்து போகாது, மின்விசிறிமூலம் ஓரளவு குளிர்த காற்று கிடைக்கும். ஏர் கூலர் காசில் இதைச் செய்யலாம். 800 சதுர அடிக்கு அதிகபட்சம் 1000 ரூபாய் செலவாகும் அவ்வளவே. மொட்டை மாடி கொதிக்கக் கொதிக்க ஏசி பயன்படுத்தும் மக்களும் இதை முயலலாம். ஏசி விரைவில் கூல் ஆகும், மின்சார செலவும் குறையும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022