நோட்டாவுக்கு முக்கியத்துவம்: உயர் நீதிமன்றம் அறிவுரை
நோட்டாவுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தரங்கம்பாடியைச் சேர்ந்த துரை வாசு தாக்கல் செய்த மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்களின் வாக்குகளை கணக்கில்
எடுத்துக் கொள்வதற்கு "நோட்டா' என்ற பகுதியை வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்படுத்தப்பட்டது.
இவற்றில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அதுகுறித்து தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தவில்லை. விதிகளின்படி, நோட்டாவுக்கான வாக்குகள் பெரும்பான்மையாக இருந்தாலும், எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே, "நோட்டா' வெற்றி பெற்றால் தொகுதியில் மறு தேர்தல் நடத்த வேண்டும். நோட்டாவிடம் தோற்றவர்கள் மறுபடியும் தேர்தலில் போட்டியிட குறிப்பிட்ட காலத்துக்கு தடை விதிக்க வேண்டும். நோட்டாவுக்கென தனி விதிகளை தேர்தல் ஆணையம் வகுக்க வேண்டும்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ.) வாக்குரிமை வழங்கும் தேர்தல் ஆணையம், படுத்தப்படுக்கையில் இருக்கும் முதியவர்கள் உள்ளிட்டவர்களின் வாக்குகளையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்ய வசதி ஏற்படுத்தி கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு விடுமுறை கால உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் யார் அதிக வாக்கு பெறுபவரை வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-
நோட்டா முறை அறிமுகமாவதற்கு முன்பு இருந்த அதே நிலையே நீடித்தால், நோட்டா என்ற முறை வந்ததால் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது? எனவே, விரிவாக ஆராய வேண்டியதுள்ளது என்றனர்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை முதல் வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.