குடிமைப் பணிகள் தேர்வு இறுதி முடிவு வெளியீடு
குடிமைப் பணிகள் தேர்வு இறுதி முடிவு வெளியீடு: தில்லி மாணவி முதலிடம்; 7-ஆம் இடத்தில் தமிழக மாணவி
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் (சிவில் சர்வீசஸ்) குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், தில்லி மாணவி முதலிடம் பிடித்துள்ளார். தமிழக மாணவி சரண்யா ஹரி ஏழாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்பட மத்திய அரசின் குரூப்-ஏ, குரூப்-பி உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி), முதன்மைத் தேர்வு, பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதிப் பட்டியலை யு.பி.எஸ்.சி. வெளியிடும்.
இதுபோல 2015-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வில் முதல்நிலைத் தேர்வும், கடந்த டிசம்பரில் முதன்மைத் தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டு, இறுதித் தேர்வான நேர்முகத் தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடத்தப்பட்டது.
இந்த நேர்முகத் தேர்வில் தகுதி பெற்ற 1,078 பேரின் பட்டியலை யு.பி.எஸ்.சி. செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இவர்களே ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளில் நியமிக்கப்பட உள்ளனர்.
இதில் தில்லியைச் சேர்ந்த பெண்ணான டினா டாபி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அத்தர் அமீர் உல் ஷபி கான் இரண்டாவது ரேங்க் பெற்றுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சரண்யா ஹரி 7-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அதுபோல புதுச்சேரியைச் சேர்ந்த வைத்திநாதன் என்பவர் 37-ஆவது ரேங்க் பெற்றுள்ளார்.
காலியிடங்கள் எவ்வளவு: தேர்வு செய்யப்பட்டவர்களில் 499 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 314 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவையும், 176 பேர் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) பிரிவையும், 89 பேர் பழங்குடியின (எஸ்.டி.) பிரிவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களைத் தவிர 172 பேர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மொத்த காலிப் பணியிடங்கள் 1,164 ஆகும். இதில் ஐஏஎஸ் பணியில் 180 பேரும், ஐஎஃப்எஸ் பணியில் 45 பேரும், ஐபிஎஸ் பணியில் 150 பேரும், குரூப்-ஏ பணியில் 728 பேரும், குரூப் பி பணியில் 61 பேரும் நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மையத்தில் படித்த 42 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்குத் தேர்வு
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 42 பேர் இறுதித் தேர்வில் தகுதி பெற்று ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மைத்தின் முதல்வர் எம். ரவிச்சந்திரன் கூறியது:
2015-ஆம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வில் தமிழக அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 42 பேர் தேர்ச்சி பெற்று, ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இதில், அகில இந்திய அளவில் 7-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சரண்யா ஹரியும் தமிழக அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார். இந்த 42 பேரில் 30 பேர் பொறியியல் பட்டதாரிகள் ஆவர்.