எங்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
எங்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இதுதான் இன்று தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கேள்வி.
சுப்ரீம் கோர்ட், நுழைவுத் தேர்வின் மூலமாகவே, மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய நிமிடத்தில் இருந்து, தமிழக மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
பனிரெண்டாம் வகுப்பில் வாங்கும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடந்து வரும் தமிழகத்தில், மாணவர்கள் அதற்கான மனநிலையோடும் தயாரிப்போடும் இருந்து வருகின்றனர். மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான புதிய விதிமுறைகளை, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரப்போகும் இறுதி நாட்களில் சொல்வது, எவ்விதத்தில் நியாயமாகும்?
'மருத்துவக் கல்லுாரிக்கான விண்ணப்பங்கள், மே 9ம் தேதி வினியோகிக்கப்படும்' என்று ஏற்கனவே தமிழக மருத்துவக் கல்லுாரி இயக்ககம் அறிவித்து உள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.தீர்ப்பு வெளியாகி ஒரு வாரம் ஆகிறது. இதுவரை தமிழக மாணவர்களுக்குத் தெளிவை உண்டாக்கும் வகையில், தமிழக மருத்துவத் துறை இயக்ககமோ, சுகாதாரத் துறை செயலரோ, அமைச்சரோ ஓர் அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தமிழகத்தின் தனித்த சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கட்டுப்படுத்தாதா? இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை தமிழக அரசின் பழைய முறைப்படியே தொடருமா அல்லது அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வின் மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெறுமா?
நான்கு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீது சீராய்வு மனு கொடுத்திருக்கின்றன. அதன் மீதான விசாரணை, ஜூலை 3ம் தேதி வரவிருக்கிறது.
இத்தனை சந்தேகங்களும், குழப்பங்களும் இருக்க, வரும் ஜூலை, 24ம் தேதி அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக இரண்டாம் கட்ட தேர்விற்கான தேதியை அறிவித்திருக்கின்றனர். இந்த மருத்துவ நுழைவுத் தேர்வை, நினைத்தவுடன் எழுதி தேர்ச்சி பெற்றுவிட முடியாது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வை எதிர்கொள்வது என்பது மிகச் சவாலானது. மாணவர்களின் மனநிலையைப் பற்றிய எந்தப் புரிதலும், அக்கறையும் இருப்பதாக, தமிழகத்தில் இருக்கும் காட்சிகள் புலப்படுத்தவில்லை.
நம் அரசியல்வாதிகள் அவர்களின் அரசியல் பாதையில் தொய்வோ அல்லது உடனடியாக மக்களின் மத்தியில் தங்களின் மாநிலப் பற்று, மொழிப் பற்று, இனப் பற்று இன்னும் தீர்ந்துபோகவில்லை என்பது பேசப்பட வேண்டுமென நினைத்தால், அவ்வப்போது சில பிரச்னைகளைத் தீவிரமாக கையில் எடுப்பர். கொஞ்ச நாட்கள் அந்த ஆக்ரோஷம் ஓடும். மக்கள் கட்சிகளின் பற்றை கொஞ்சம் நம்பத் தொடங்கி விட்டனர் என்றால், உடனே அரசியல்வாதிகள் அதை மறந்துவிட்டு, அடுத்த விஷயத்திற்குப் போய்விடுவர்.
இந்தப் பட்டியலில், நுழைவுத் தேர்வும் சேர்ந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. அதிக அச்சத்திற்குக் காரணம் பாதிக்கப்பட போவது குழந்தைகள் என்பதும், அவர்களின் எதிர்காலம் இதில் அடங்கி இருக்கிறது என்பதும் தான்.
மாணவர்களை வழிநடத்துவது கல்வி நிறுவனங்கள் தான். கல்வி நிறுவனங்களை வழிநடத்தும் அரசு, தனக்கென கல்விக் கொள்கைகளை வகுக்கிறது. கல்விக் கொள்கைகளை வரையறுக்க கல்வியாளர்களை, அரசியல்வாதிகளை, அதிகாரிகளை நம்பியிருக்கிறது...
மாநில முடிவுகள், மாநிலத்தின் சுயாட்சி, மாநிலத்தின் தனித்த கல்விக் கொள்கைகள் என்று எத்தனையோ விஷயங்களை உள்ளடக்கி, மாநில அரசு கல்வி சார்ந்த முடிவுகளை எடுக்கிறது.
எந்த முடிவு எடுத்தாலும், என்ன கல்விக் கொள்கை கொண்டு வந்தாலும், அதில் மாணவர்கள் பாதிக்கா வண்ணம் இருக்க வேண்டும். அவர்களின் கல்வித் தரம் மேம்பட வேண்டும். அவர்கள் எந்த இடையூறும் இல்லாமல் உயர்கல்வி பெற வேண்டும். இதுதான் மாணவர்களின் சின்ன எதிர்பார்ப்பு. நுழைவுத் தேர்வு ரத்து என்பது தமிழக மாணவர்களுக்கு அரிய வரப்பிரசாதம். நுழைவுத் தேர்வு வேண்டும் என்று விரும்புபவர்கள், இரண்டு மிக முக்கியமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
ஒன்று:
கோழிப் பண்ணைகளைப் போல் நடத்தப்படும் பள்ளிகள், 11ம் வகுப்பை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, இரண்டாண்டுகள் லாடம் கட்டிய குதிரைகளைப் போல், மாணவர்களை கொடுமைப்படுத்தி பிளஸ் 2 வகுப்புப் பாடங்களை மட்டும் படிக்கச் செய்து, மருத்துவப் படிப்பில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து விடுகின்றனர். இதனால், அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் மிகவும் பின்தங்கி விடுகின்றனர்.
உண்மையில் கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெறவே, அரசாங்கம் முயற்சி செய்து இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. ஆனால், அந்த நோக்கம் நடைமுறையில் நிறைவேற விடாமல் செய்வது, தனியார் பள்ளிகள் தான். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, இவை போன்ற தனியார் பள்ளிகளால் வீழ்ச்சிஅடையத் தொடங்கி இருக்கிறது.
இரண்டாவது:
இயந்திரத்தனமாக வெறும் பயிற்சியால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் வாங்க பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள், மருத்துவக் கல்லுாரியிலும், பொறியியல் கல்லுாரியிலும் சேரும்போது, அதன் தரம் குறைந்து விடுகிறது. குறிப்பாக மருத்துவக் கல்லுாரியின் தரம் குறைவதோடு, மக்களுக்கான சேவைப் பணி என்பதும், அடியோடு மறைந்து வருகிறது என்பது தான்.ஒரு பள்ளி, அரசின் கண்களைக் கட்டிவிட்டு தன்னிச்சையாக நடக்கும் என்பது அரசாங்கத்தின் பலவீனம் தானே!
அந்தக் கடினமான முடிவு கல்வியை முழுக்க முழுக்க அரசு மயமாக்குவதே. தங்களுடைய குடிகளுக்கு முழுமையான தரமான ஏற்றத்தாழ்வுகளற்ற ஒரு கல்வியைத் தர முன்வருவது மட்டுமே, மாணவர்களின் உயர் கல்விப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வாகும்.
கல்வி, அரசு மயமாக்கப்பட்டால், ஒவ்வொரு ஆண்டும் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட எல்லா பிரச்னைகளுக்கும், நம்மால் தீர்வு கண்டறிய முடியும். அரசு மயம் என்ன சர்வரோக நிவாரணியா என கேட்கலாம்.
அரசு மயம் எனபது சர்வரோக நிவாரணியல்ல; ஆனால், அரசாங்கத்தை அது சரியாக செயல்படாதபட்சத்தில் நம்மால் கேள்வி கேட்க முடியும், நல்ல கொள்கைகளுக்காக வலியுறுத்த முடியும், வழிக்கு வரவில்லையென்றால், அடுத்த தேர்தலில் அதற்கு பதில் சொல்ல முடியும்! பெரிய இரும்புக் கதவுகள் போட்ட பள்ளிகளின் உள்ளே கல்வியை அடகு வைத்துவிட்டு, அதன் சாவியையும் உள்ளே போட்டுவிட்டால், நம்மால் என்ன சீர்திருத்தத்தைச் செய்ய முடியும்?
அ.வெண்ணிலா
கட்டுரையாளர், கவிஞர்