தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம்
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு... கட்டாயம் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் பரிசீலனை
தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கா
ன மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.
அதே நேரத்தில் பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டுமென,சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது.இந்த நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த உத்தரவிட வேண்டும் என, தொடரப்பட்ட வழக்கில், ''மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்,'' என, சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது.இதனிடையில், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா,குஜராத் ஆகிய மாநிலங்கள், இந்த ஆண்டு மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலமே மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்தன.தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அந்த முறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டுமென, தமிழக அரசும் மனு தாக்கல் செய்தது.இந்த மனுக்கள்மீது, நீதிபதிகள், ஏ.ஆர்.தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணைக்குப் பின், சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள தாவது: தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மூலமே நடத்தப்படவேண்டும்.குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறைகளிலேயே மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்வது குறித்து, மத்திய அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். மே, 1ல், நடந்த முதல்கட்ட தேர்வை எழுதியவர்கள், ஜூலை, 24ல் நடக்கும் இரண்டாம் கட்டத் தேர்வையும் எழுத அனுமதிப்பது குறித்தும் விளக்க வேண்டும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளது.
வழக்கு விசாரணை, 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தொடரும் குழப்பம்: அரசு மருத்துவக் கல்லுாரி களில், 15 சதவீத இடங்களுக்காக, இதுவரை, அகில இந்திய மருத்துவநுழைவுத் தேர்வு நடந்து வந்தது.தமிழகத்தில், பொது நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசை தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு முறை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தமிழக மாணவர்கள்தள்ளப்பட்டிருந்தனர்.தற்போது, இதற்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் முன்வந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் கல்லுாரிகளில் சேர்வதற்கு, நுழைவுத் தேர்வை எழுதியாகவேண்டிய நிலையில் மாணவர்கள் உள்ளனர். போதிய கால அவகாசம் இல்லாததால், தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
வழக்கறிஞர்கள் வாதம்:
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையின்போது வழக்கறிஞர் களின் வாதம்:
மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான்: தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தினால், 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை. இது, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார்: மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்னை தொடர்பாக, இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசிக்க, மத்திய அரசு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
சி.பி.எஸ்.இ., சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த்: முதல் கட்ட நுழைவுத் தேர்வை எழுதியவர்கள், இரண்டாம் கட்டத் தேர்வையும் எழுத அனுமதித்தால், 9.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும்நிலை ஏற்படும்.அதே நேரத்தில், முதல் கட்டத் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வு எழுதாத, 40 ஆயிரம் மாணவர்களை மட்டும், இரண்டாம் கட்டத் தேர்வை எழுத அனுமதிக்கலாம்.இதனால், நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு போதிய மையங்கள் ஏற்பாடு செய்ய முடியும்.