அரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்பிப்பதில் மாற்றம்.
தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான வாடகைவீடு ஒதுக்கீட்டை புதுப்பிக்க, 'ஆன்லைன்'முறை கட்டாயமாகிறது.
இதற்கான நடவடிக்கையை வீட்டுவசதி வாரியம் துவக்கி உள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்காக, பிரத்யேக வாடகை குடியிருப்பு திட்டத்தை வீட்டுவசதிவாரியம் செயல்படுத்தி வருகிறது.சென்னையில், 17 இடங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும், இத்திட்டத்துக்காக கட்டப்பட்ட வீடுகள் பயன்பாட்டில் உள்ளன.
பராமரிப்பு
இந்த வீடுகள் இருப்பு, ஒதுக்குவது, பராமரிப்பு போன்ற பணிகளுக்கான நடைமுறைகள் மாற்றப்பட உள்ளன. இது குறித்து,பெயர் குறிப்பிட விரும்பாத வீட்டுவசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த திட்டத்தில் வாடகை வீடு ஒதுக்கீடு பெறும் அரசு ஊழியர், உரிய கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் முறையாக புதுப்பிப்பதில்லை; வாடகை தொகையையும் நிலுவை வைத்து விடுகின்றனர்.
சிக்கல்
ஒவ்வொருவரும் நேரடியாக சம்பந்தப்பட்ட செயற் பொறியாளர் அலுவலகத்துக்கு சென்று, ஒதுக்கீட்டை புதுப்பிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே, வாடகை வீடுகளில் வசிப்போர், ஆன்லைன் முறையில் புதுப்பிக்க புதிய வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வரு கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.