நாம் சாப்பிடுவது ஐஸ்கிரீம்தானா?

வீட்டிலும் வெளியிலும் தகிக்கிற வெயிலுக்கு நாளெல்லாம் நாக்கைச் சுழற்றி ஐஸ்கிரீமைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் வெம்மை குறையாது போலிருக்கிறது. பெரியவர்களுக்கே இந்த நிலை என்றால் குழந்தைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. 




அழுது அடம்பிடித்தாவது ஐஸ்கிரீமை வாங்கித்தரச் சொல்லிச் சாதித்துவிடுவார்கள்.மக்களின் இந்த மனநிலையைப் புரிந்துகொண்ட உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், பல்வேறு ரகங்களிலும் சுவைகளிலும் ஐஸ்கிரீமை விற்பனை செய்துவருகின்றன. ஒருகாலத்தில் சைக்கிளில் மரப்பெட்டியில் வைத்துக் குச்சி ஐஸ் விற்பவர் வந்தால்தான், ஐஸ் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால், இன்றைக்கோ கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றிப் பெட்டிக் கடைகளிலும் ஐஸ்கிரீம் கிடைக்கிறது. காசுக்கேற்ற அளவில் கிடைப்பதால், கிட்டத்தட்ட எல்லோரும் ஐஸ் சாப்பிடுகிறார்கள். ஆனால், ஐஸ்கிரீம் என்ற பெயரில் நாம் சாப்பிடும் பொருள், உண்மையில் ஐஸ்கிரீம்தானா?

ஐஸ்கிரீம் என்றால்?

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வரையறைப்படி ஐஸ்கிரீம் என்றால் பால் அல்லது பாலிலிருந்து பெறப்பட்ட பொருட்களைப் பதப்படுத்தி உறையவைக்கப்பட்டது என்று பொருள். அவற்றுடன் இனிப்பூட்டிகள், பழங்கள் அல்லது பழத்திலிருந்து பெறப்பட்டவை, முட்டை ஆகியவற்றைச் சேர்த்தோ, சேர்க்காமலோ அது செய்யப்பட்டிருக்கலாம். குல்ஃபி, சாஃப்டி ஐஸ்கிரீம் ஆகியவற்றுக்கும் இந்த வரையறை பொருந்தும்.இந்த வரையறையின் கீழ் வராத எதுவும் ஐஸ்கிரீம் கிடையாது. அவை உறையவைக்கப்பட்ட இனிப்பு வகைகள் மட்டுமே. அவை தாவரச் சமையல் எண்ணெயுடன் கொழுப்பு சேர்க்கப்பட்டுப் பதப்படுத்தப்பட்டு, உறையவைக்கப்படுபவை. அல்லது 37 டிகிரிக்கும் குறைவானஉருகுநிலை கொண்ட கொழுப்புப் பொருளுடன் தாவர எண்ணெய் சேர்த்துப் பதப்படுத்தப்பட்டு உறையவைக்கப்படுபவை. இவற்றுடன் பால் புரதம், இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். பார்ப்பதற்கு இவை ஐஸ்கிரீம்போலவே இருந்தாலும், ஐஸ்கிரீம் கிடையாது.

கலப்படம் ஏன்?

பால் மற்றும் பால் பொருட்களை வைத்து ஐஸ்கிரீம் செய்வதற்குக் கூடுதலாகச் செலவாகும். அதையே தாவரக் கொழுப்பு மற்றும் பால் புரதங்களைக் கொண்டு தயாரிக்கும்போது, நான்கில் ஒரு பங்குதான் செலவாகும். உற்பத்தி செலவு குறைவு, ஆனால் லாபமோ அதிகம். நேரடிப் பால் பொருட்களைத் தவிர்த்து, தாவரக் கொழுப்பைப் பயன்படுத்துவதால் நான்கு மடங்கு லாபம் கிடைக்கிறது. அதனால் பெரும்பாலான நிறுவனங்கள், உறையவைக்கப்பட்ட இனிப்பை ஐஸ்கிரீம் என்ற போர்வையில் விற்பனைக்கு அனுப்புகின்றன.தோற்றம் தரும் ஏமாற்றம்ஒரு சாதாரணக் குடிமகனைப் பொறுத்தவரை ஐஸ்கிரீம் என்பது மிருதுவாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும் ஒரு உணவுப் பொருள். வெவ்வேறு நிறங்களிலும் சுவைகளிலும் கிடைக்கும் என்பதைத் தாண்டி, அதில் ஆராய்ச்சி செய்ய வேறெதுவும் இல்லை. அட்டை - பிளாஸ்டிக் கப்பின் மீது அச்சிடப்பட்டிருக்கும் படங்களும் ஊடகங்களில் வரும் விளம்பரங்களும் தரும் நம்பிக்கையில், அவற்றை ஐஸ்கிரீம் என நினைத்து விரும்பி சுவைக்கிறோம்.ஆனால், ஐஸ்கிரீம் அல்லாத பொருட்களை ‘ஐஸ்கிரீம்’ என்று விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றுவது மிகப் பெரிய மோசடி என்று இந்திய விளம்பரத் தரக்கட்டுப்பாட்டு கவுன்சிலிடம் 2012-ல் அமுல் நிறுவனம் புகார் செய்தது. பல்வேறு கட்ட ஆய்வு, விசாரணைக்குப் பிறகு இந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் வேறு சில உணவுப் பொருள் நிறுவனங்கள், தங்கள் விளம்பரங்களில் ‘ஐஸ்கிரீம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தப் பொருட்களின் அட்டையின் மீது ஐஸ்கிரீம் படம் இருக்கும், ஆனால் ‘ஐஸ்கிரீம்’ என்று வார்த்தை மட்டும் இருக்காது. ஓர் ஓரமாக ‘உறையவைக்கப்பட்ட இனிப்பு’ (frozen dessert) என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், வாடிக்கையாளர்களில் எத்தனை பேருக்கு இது தெரியும்?

ஐஸ்கிரீம் நல்லது

இரண்டு நிமிடத்தில் உருகிவிடக்கூடிய ஒரு பொருளுக்கு இத்தனை ஆராய்ச்சி தேவையா என்று யோசிக்கலாம். நாம் சாப்பிடுவது ஐஸ்கிரீம் வரையறைக்குள் வரவில்லை என்றால் என்ன? சுவையாகவும் மணமாகவும் இருக்கிறதே, அது போதாதா என்றும் தோன்றலாம்.ஆனால், நாம் சாப்பிடுகிற பொருள், உடலுக்கு உகந்ததா என்று பார்ப்பது மிகமிக முக்கியம். விலை குறைந்த எண்ணெயில் தயாரிக்கப்படுவதால், உறையவைக்கப்பட்ட இனிப்புகளின் விலை குறைவாக இருப்பதில்லை. ஐஸ்கிரீமுக்கு இணையான விலையில்தான் அவையும் விற்கப்படுகின்றன. அதிக விலை கொடுத்துத் தரக்குறைவானபொருளை ஏன் வாங்க வேண்டும்?

கவனம் அவசியம்

“இன்றைய சூழ்நிலையில் வீட்டில் தயாரிக்கப்படாத எந்தவொரு உணவுப் பொருளையும் ஒரு முறைக்கு இரண்டு முறை சரிபார்த்த பிறகே சாப்பிட வேண்டும்” என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கோமதி.“ஐஸ்கிரீமில் பால் பொருட்களும் பழங்களும் மட்டும் சேர்க்கப்படுவதால், அதைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தப் பெரிய பாதிப்பும் இல்லை. ஐஸ்கிரீம் வடிவில் சாப்பிடுவதால் கால்சியச் சத்து உடலில் எளிதில் ஈர்த்துக்கொள்ளப்படுகிறது. உடலுக்குத் தேவையான புரதமும் கிடைக்கிறது. ஆனால், உறையவைக்கப்பட்ட இனிப்புகளில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பு, உடலுக்கு நல்லதல்ல. கொழுப்பு எரிக்கப்படுவதால் வெளிப்படுகிற சக்தி நம் தினசரி உடலியக்கச் செயல்பாடுகளுக்கு அவசியம் என்றாலும், கெட்ட கொழுப்புஉடலில் சேருவது ஆரோக்கியமானதல்ல. உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்தால் இதயக் கோளாறு ஏற்படலாம்” என்று சொல்லும் கோமதி, ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கும் சளி பிடிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்.“சுகாதாரமற்ற சூழலில் தயாரிக்கப்படுகிற ஐஸ்கிரீமைச்சாப்பிடுவதால் நோய்த்தொற்று ஏற்படலாம். குச்சி ஐஸ் மீது ஊற்றித் தரப்படும் சாக்கரின் உடலுக்கு நல்லதல்ல. குழந்தைகள் அடம்பிடித்தால், தரமான ஐஸ்கிரீமை வாங்கிக் கொடுங்கள்” என்று யோசனை சொல்கிறார் கோமதி.விலை கொடுத்து நாமே நோயை வரவழைத்துக்கொள்வதைவிட, உண்மையிலேயே நாம் வாங்குவது ஐஸ்கிரீம்தானா என்று சரிபார்த்து வாங்கலாம். வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வு மட்டுமே போலிகளை ஒழித்துக்கட்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022