கேடு விளைவிப்பது உறுதியானால் மைதா மாவை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

கேடு விளைவிப்பது உறுதியானால் மைதா மாவை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; உணவு துறை ஆணையருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
         அலொட்சான்’ ரசாயன கலவையுடன் கூடிய மைதா மாவு மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வு மூலம் தெரியவந்தால், அந்த மைதாவுக்கு 3 மாதங்களுக்குள் த
டை விதிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை ஆணையருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.       நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தெற்கு தேத்தாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கே.ராஜேந்திரன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ரசாயன கலவை

கோதுமையில் உள்ள நார்ச்சத்துக்களை அகற்றி, வெள்ளை நிறத்துடன் மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. இந்த மைதா வெண்மையாகவும், மிருதுவாகவும் இருக்க ‘அலொட்சான்’ ரசாயனப் பொருள் கலக்கப்படுகிறது.

இந்த அலொட்சான் என்பது விலங்குகளின் கணையத்தில் ‘பீட்டா செல்களை’ அழித்து, இன்சூலின் சுரப்பதை தடுக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருளாகும். இப்படிப்பட்ட மைதா மாவு மூலம் தயாரிக்கப்படும் புரோட்டாவையும், ‘பேக்கரி’ கடைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள், கேக் வகைகளையும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர். 

நீரழிவு 

இதனால், மனிதர்களின் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்கப்படுகிறது. இன்சூலின் சுரப்பது தடுக்கப்பட்டு, ஏராளமானோர் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்திலும் இந்த பாதிப்பு அதிகரிக்க நேரிடும். இதை தெரிந்துக் கொண்டுதான், இந்த வகையான மைதா மாவுகளுக்கு, அமெரிக்கா போன்ற நாடுகள் தடை விதித்துள்ளது. 

மனிதர்களை மெதுவாக கொல்லும் விஷம் என்று ரசாயன கலவை கொண்ட மைதா மாவை, டாக்டர்கள் அழைக்கின்றனர். எனவே, அலொட்சான் மைதா குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உணவு தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளிடம் கடந்த மார்ச் மாதம் விளக்கம் கேட்டு மனு கொடுத்தேன். 

நிபுணர் இல்லை

ஆனால், இதுவரை பதில் எதுவும் அளிக்கவில்லை. எனவே, அலொட்சான் மைதாவை தடை விதிக்க வேண்டும் என்று தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை ஆணையர், சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்தகத்துறை இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த மனு மீதான விசாரணையின்போது, உணவு தரம் தொடர்பான விஷயத்தில் மனுதாரர் நிபுணத்துவம் பெற்றவர் இல்லை என்பது தெரிகிறது. 

தடை விதிக்க வேண்டும்

அதேநேரம், மைதாவில் ரசாயன கலவை உள்ளது. அது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று மனுதாரர் கூறும் காரணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

ஆனால், இந்த நிலையில், எங்களால் மனுதாரர் கொடுத்த மனுவை பரிசீலிக்கும்படிதான் அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியும். 

எனவே, மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத்துறை ஆணையர் ஆய்வுகளையும், விசாரணைகளையும் மேற்கொள்ளவேண்டும். அப்போது மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கு உண்மை இருப்பதாக தெரியவந்தால், ரசாயன கலவை கொண்ட மைதாவை தடைவிதிக்க சட்டப்படியான நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் மேற்கொள்ளவேண்டும். இந்த மனுவை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022