ஐ.ஐ.டி.,க்கான நுழைவு தேர்வில் சிக்கலான கணிதம், வேதியியல்
ஐ.ஐ.டி., உயர்கல்வி நிறுவனத்தில், இன்ஜி., படிக்க சேர்வதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில், கடந்த ஆண்டு வினாக்கள் இடம் பெற்றன.ஐ.ஐ.டி., போன்ற மத்திய அரசின்
உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., பி.டெக்., படிப்பில் சேர இரண்டு வித நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும். மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,நடத்தும், ஜே.இ.இ., என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
பின், ஐ.ஐ.டி., கவுன்சில் நடத்தும், ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த அட்வான்ஸ்ட் தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடந்தது. கவுஹாத்தி ஐ.ஐ.டி., நடத்திய இந்த தேர்வில், காலை முதல் மாலை வரை, இரண்டு தாள்களுக்கு தேர்வு நடந்தது. முதல் தாளில் வினாக்கள் எளிதாக இருந்தன.
இரண்டாம் தாள் சற்று கடினமாக இருந்ததாக, தேர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து, மும்பையைச் சேர்ந்த, ஜே.இ.இ., பயிற்சி நிறுவனமான ஆகாஷ் கல்வி பணிகள் நிறுவன தலைவர் ஆகாஷ் சவுத்ரி கூறியதாவது:இந்த தேர்வில், கடந்த ஆண்டில் இடம் பெற்றது போன்ற கேள்விகள் அதிகமாக இருந்தன. 'அப்ஜெக்டிவ் வகை மல்டிபிள் சாய்ஸ்' வினாக்களில், ஒரே விடையும், குழப்பமான பல விடைகளும் கலந்து இருந்தன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் குறைந்தது, நான்கு கேள்விகளாவது மாணவர்களை குழப்புவதாக இருந்தது.
வேதியியல் கேள்விகள் ஓரளவு எளிமையாக இருந்தாலும், 80 சதவீத மதிப்பெண் எடுப்பது கடினம். கணித வினாக்கள் கடினமாகவும், நீண்ட நேரம் யோசித்து எழுதும் வகையில் இருந்தன. இதில், அதிகபட்ச மதிப்பெண் வர வாய்ப்பில்லை. இயற்பியல் மற்றதை விட எளிதாகவே இருந்தது. மொத்தத்தில், 40 சதவீதம் முதல், 60 சதவீதம் வரையில் தான் மதிப்பெண்எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.